மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது லம்ப்சம் என்ற மொத்தமாக முதலீடு செய்வது மற்றும் எஸ்ஐபி (SIP) என்ற ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்வது என்பதுதான் பலர் அறிந்திருப்பார்கள். மேலும், ஒரு குறிப்பிட்ட காலம் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால், முடிவில் ஒரு பெரிய தொகை கிடைக்கும் என்பதுதான் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் சிறப்பு அம்சமாகும்.
ஆனால் அதே நேரத்தில் பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்தால், ஒவ்வொரு ஆண்டும் அல்லது ஒவ்வொரு மாதமும் வருமானம் கிடைக்கும் வகையில் அந்த முதலீடு இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல், மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்பிலும் ஒவ்வொரு மாதமும் நமக்கு வருமானம் கிடைக்கும் வகையில் ஒரு திட்டம் உள்ளது என்பதை பலருக்கு தெரியாமல் இருக்கலாம். அதன் பெயர்தான் சிஸ்டமேட்டிக் வித்ட்ராவல் பிளான் (SWP).
அதாவது SWP என்பது வங்கி டெபாசிட் மற்றும் பென்ஷன் தொடர் வருமானத்திற்கு மாற்றாக இந்த திட்டம் செயல்பட்டு வருகிறது. இதில் முதலீடு செய்வது மிகவும் எளிது. மாதம் தோறும் குறிப்பிட்ட தேதியில் SIP முறையில் முதலீடு செய்கிறோமோ, அதே போல் SWP முறையில் குறிப்பிட்ட தேதியில் பணம் எடுக்க முடியும்.
ஒருமுறை இதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டால், ஒவ்வொரு மாதமும் நாம் எந்த தேதியை குறிப்பிட்டோமோ, அந்த தேதியில் நமது வங்கி கணக்கிற்கு பணம் வரவு வைக்கப்படும். அதற்கேற்ப யூனிட்டுகளை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் விற்பனை செய்து கொள்ளும். பிக்சட் டெபாசிட் என்பது கடன் சார்ந்த திட்டம் என்பதால், இதில் வரி போக 5% வருமானம் மட்டுமே கிடைக்கும். ஆனால் SWP திட்டம் பங்குச் சந்தை சார்ந்தது என்பதால் அதிகளவில் வருமானம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
SWP முறையில் பணம் எடுக்க யூனிட்டுகளை விற்பனை செய்த போது, முதலில் சேர்க்கப்பட்ட யூனிட்டுகள் விற்பனை செய்யப்படும். இதனால் நீண்ட காலம் மூலதன ஆதாய சலுகை கிடைக்கும் என்பதும், அதுமட்டுமின்றி இந்த வருமானத்திற்கு குறைவான வருமான வரி கட்டினால் போதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.