பல இளைஞர்களும் தங்கள் படித்த படிப்பிற்கான வேலை சரியாக கிடைக்காததன் காரணமாக வருமானத்திற்கும், தங்களது குடும்ப சூழ்நிலையை ஓரளவு பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் கிடைக்கும் வேலையை செய்தும் வருகின்றனர். என்றாவது ஒருநாள் நிச்சயம் தங்கள் லட்சியத்தை அடைந்து விடலாம் என கருதி அவர்கள் வேகமாக இயங்கி வரும் சூழலில், இதில் ஒரு பக்கம் பலரும் உணவு டெலிவரி ஊழியர்களாகவும், இன்னொரு பக்கம் ஓலா, உபெர் என கேப் நிறுவனங்களில் டிரைவர்களாகவும் பணிபுரிந்து வருகிறார்கள்.
இப்படி பணிபுரியும் பலரை நாம் பார்க்கும் போது அவர் டிரைவர் தொழிலை தான் செய்து வருகிறார் என்று தான் நினைப்போம். ஆனால் அதில் பலரும் ஐடி ஊழியர்களாகவோ அல்லது வேறு துறையில் பிரபலமாக இருக்கும் நபர்களாகவோ கூட இருக்கலாம். ஆனாலும் இன்னும் பணத்தை சம்பாதித்து குடும்பத்தை காத்துக் கொள்ள வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் அவர்கள் ஓடுவதால் நம்மாலும் சரியாக சிலரை அடையாளம் கண்டு கொள்ள முடிவதில்லை.
பெரிய தடகள வீரரா..
அந்த வகையில் சமீபத்தில் மும்பை பகுதியில் ஓலா கார் ஓட்டுனராக இருந்து வரும் நபர் பற்றி தெரிய வந்த சில தகவல்கள் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. ஆர்யன் சிங் என்ற நபர் ஒருவர் சமீபத்தில் ஓலா மூலம் கேப் புக் செய்து பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அந்த காரை பராக் பாட்டீல் என்ற நபரும் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரிடம் ஆர்யன் சிங் பேச்சை கொடுத்த போது பல வியப்பான தகவல்களும் கிடைத்துள்ளது.
தடகள வீரராக இருந்துள்ள பராக் பாட்டீல் இந்தியாவுக்காக ஒலிம்பிக்கிலும் கால் பதித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் ஆசியாவில் ட்ரிபிள் ஜம்ப்பில் 2 வது இடத்தையும், நீளம் தாண்டுதலில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளதாக தனது பதிவில் ஆர்யன் சிங் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச அரங்கில் இந்தியாவுக்காக கால் பதித்த போதெல்லாம் பராக் பாட்டீல் பதக்கங்கள் வெல்லாமல் திரும்பி வந்ததே இல்லையாம்.
ஸ்பான்சர் இல்லாததால் வந்த நிலை..
மொத்தமாக 2 தங்க பதக்கங்களையும், 11 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் மூன்று வெண்கல பதக்கங்களையும் வென்றுள்ள பராக் பாட்டீலுக்கு ஸ்பான்சர்கள் யாரும் கிடைக்கவில்லை என்றும் குடும்பத்திற்கு போதுமான நிதி உள்ளிட்ட விஷயங்கள் இல்லை என்பதன் காரணமாக இப்படி கார் ஓட்டி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.
பராக் பாட்டீலுடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ஆர்யன் சிங், பலரிடமும் இவருக்கு உதவி செய்ய முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். சர்வதேச அரங்கில் தடகள வீரராக ஜொலித்த ஒருவர் கேப் டிரைவராக இருந்து வருவது தற்போது அதிகம் பேசு பொருளாக மாறி உள்ளது.