இன்றைய காலகட்டத்தில் அனைவரும் வேகமாக இயங்கிக் கொண்டிருப்பதற்கு மத்தியில் நமக்கு பிடித்தமான துறையாக இருந்தாலும் அதில் தொடர்ந்து கவனம் செலுத்திக் கொண்டிருந்தால் மட்டும் தான் நம்மால் நிறைய விஷயங்களை சாதிக்க முடியும். மேலும் கொஞ்சம் நமது வேலையில் கவனம் சிதறிவிட்டாலும் கூட உடனடியாக அந்த பணியில் இருந்து நாம் நீக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.
ஒரு பக்கம் இப்படி இருக்க, இன்னொரு புறம் நிதிச்சுமை உள்ளிட்ட காரணங்களுக்காக பல ஊழியர்களை நிறைய நிறுவனங்கள் வேலையில் இருந்து நீக்கியும் வருகிறது. அந்த வகையில் 14 ஆண்டுகளாக ஒரே துறையில் இருந்த போதும் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் அதன் பின்னர் எடுத்த முடிவு அனைவரையுமே வியந்து பார்க்க வைத்துள்ளது. மும்பை பகுதியை சேர்ந்தவர் தான் கமலேஷ் கம்டேகர்.
பறிபோன வேலை
இவர் கடந்த 14 ஆண்டுகளாக அசிஸ்டன்ட் கிரியேட்டிவ் மேனேஜராக இருந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் முன்னணி கிராபிக் டிசைனராகவும் இருந்து வந்துள்ளார். 14 ஆண்டுகள் என்பது மிகப்பெரிய அனுபவம் என தெரியும் சூழலில் திடீரென அவர் வேலை பார்த்து வந்த நிறுவனத்தில் இருந்து பல ஊழியர்களை செலவு குறைப்பின் பெயரில் எந்த காரணமும் இன்றி நீக்கம் செய்துள்ளனர்.
அதில் கமலேஷ் கம்டேக்கரும் ஒருவராக இருக்க, அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமலும் விழித்துள்ளார். 14 ஆண்டுகள் அனுபவம் இருப்பதால் நிச்சயம் வேறு நிறுவனத்தில் வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் பல இடங்களில் அவர் தனது ரெஸ்யூமை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதுடன் தனது நண்பர்கள் குழுவில் இருக்கும் சிலரின் உதவியுடன் வேலைக்கு விண்ணப்பித்தும் அதற்கு பலன் கிடைக்கவில்லை.
துணிச்சலாக எடுத்த முடிவு
பல அனுபவம் இருந்த போதிலும் தன்னை யாரும் எந்த நிறுவனங்களும் எடுக்க முன்வராததால் விரக்தி அடைந்துள்ளார் கமலேஷ். அப்படி ஒரு சூழலில் தான் மிகத் துணிச்சலான ஒரு முடிவையும் எடுத்துள்ளார் கம்லேஷ். குறைந்த சம்பளத்திற்கு வேறு இடங்களில் வேலை செய்வதற்கு நாமே ஏன் ஒரு பிசினஸ் தொடங்கி சொந்தமாக சம்பாதிக்க கூடாது என்றும் கமலேஷுக்கு தோன்றியுள்ளது. இதன் காரணமாக தனக்கு எந்த முன் அனுபவமும் இல்லாத ஆட்டோ ஓட்டுனராக மாற வேண்டும் என்று முடிவெடுத்து புதிய ஆட்டோவை வாங்கி உள்ளார்.
14 ஆண்டுகள் கிராபிக் டிசைன் துறையில் சாதித்த போதும் யாரும் வேலை கொடுக்க முன்வராததால் எந்த விதத்திலும் அடுத்தவரை நம்பாமல் தன்னம்பிக்கையில் மட்டுமே கவனம் செலுத்தி சொந்த தொழிலை செய்ய முன் வந்தது பலருக்கும் ஒரு உத்வேகத்தை தான் கொடுத்து வருகிறது.