டீ போட்டு தராத மருமகள் கழுத்தை நெறித்து கொலை செய்த மாமியார்.. அதிர்ச்சி சம்பவம்..!

பொதுவாக மாமியார் மருமகள் சண்டை சின்ன சின்ன காரணங்களுக்காக நடக்கும் என்றும், சில சண்டை விபரீதமாகி கொலை வரை சென்றதையும் ஏற்கனவே பல உதாரணங்களை பார்த்திருக்கிறோம். அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் மருமகள் டீ போட்டுக் கொண்டு வரவில்லை என்பதற்காக அவரை கழுத்தை நெறித்து கொலை செய்த மாமியார் குறித்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முகமது அப்பாஸ் என்பவருக்கு அஜ்மீரா பேகம் என்பவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணமானது. இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகள், 8 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக மாமியார் மருமகளிடையே சண்டை வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் தனது மருமகள் அஜ்மீராவிடம் டீ போட்டுக் கொண்டு வரும்படி மாமியார் கூற,. அதற்கு அஜ்மீரா, ‘டீ எல்லாம் போட்டு தர முடியாது, உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்களே போட்டுக் கொள்ளுங்கள்’ என்று கூறிய போது இருவருக்கும் இடையே வாய் தவறாக ஏற்பட்டதாகவும் ஒரு கட்டத்தில் அது முற்றி ஆத்திரமடைந்த மாமியார் தனது மருமகள் என்று கூட பார்க்காமல் அவரது கழுத்தை நெறித்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் கழுத்தை நெறித்ததால் மூச்சு திணறிய மருமகள் அஜ்மீரா மயக்கம் அடைந்து கீழே விழுந்ததாகவும், இதனை அடுத்து அவரை பரிசோதனை செய்தபோது அவர் இறந்து விட்டதாகவும் தெரிகிறது. இதனை அடுத்து காவல்துறையினார் விரைந்து வந்து அஜ்மீரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிய நிலையில் மாமியாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஒரு சின்ன டீ விஷயத்திற்காக மருமகளை அவசரப்பட்டு கொலை செய்துவிட்ட 53 வயது மாமியார் இனி தன்னுடைய வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.