சமீபத்தில் வேலைக்கு சேர்ந்த இன்றைய இளைஞர்கள் தங்கள் ஓய்வு காலத்தில் மாதம் ஒரு லட்ச ரூபாய் பெற வேண்டும் என்றால் இன்று என்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம்.
தற்போதைய நிலையில் நடுத்தர வர்க்கத்தினர் ஒரு மாதத்திற்கு சுமார் 40,000 சராசரியாக செலவு செய்து வரும் நிலையில், இதே முப்பது ஆண்டுகள் கழித்து ஒரு லட்ச ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். பண வீக்கம் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் செலவுகள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், அதற்கேற்றவாறு சேமிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.
25 வயதில் ஒருவர் வேலைக்கு சேர்கிறார். இன்றைய சூழ்நிலையில் வீட்டு செலவுக்கு 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டும். இந்த நிலையில், ஓய்வுக்கு பின்னரும் அவர் நிம்மதியாக தனது மீத காலத்தை ஓட்ட வேண்டும் என்றால், இன்றே சேமிப்பில் ஈடுபட வேண்டும். வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை வேலைக்கு சேர்ந்த உடனே சேமிப்பது, சேமித்தால் தான் ஓய்வு காலத்தில் நான் நிம்மதியாக வாழ்க்கையை நடத்த முடியும்.
தற்போது அனைத்து தனியார் நிறுவனங்களிலும் பென்ஷன் என்பது இல்லை. அரசிடம் இருந்தும் பென்ஷன் வராது என்பதால், வேலைக்கு சேர்ந்தவுடனே குறைந்தபட்சம் 2000 ரூபாய் முதலீட்டை ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் சம்பளம் அதிகமாகும்போது முதலீடு தொகையை கூட்டிக் கொண்டே வந்தால், 35 வருடங்கள் கழித்து சராசரியாக 12 சதவீத வட்டியுடன் நீங்கள் சேமித்த பணம் சுமார் ஒன்றரை கோடி கிடைக்கும்.
அந்த பணத்தை அப்படியே கடன் சந்தை மற்றும் பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்தால், ஒவ்வொரு மாதமும் வரிகள் போக உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பென்ஷன் போல் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைக்கு 40 ஆயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டிய மக்கள், 35 வருடம் கழித்து பணவீக்கம் காரணமாக ஒரு லட்ச ரூபாய் செலவு செய்ய வேண்டும் என்பதால், அந்த தொகை உங்களுக்கு உங்கள் சேமிப்பின் மூலம் வட்டியாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, இன்றைய இளைஞர்கள் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு உடனடியாக ஒரு நல்ல மியூச்சுவல் பண்ட் ஆலோசகரை ஆலோசித்து சேமிப்பை தொடங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.