தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அரசியலில் கால்பதித்த போது நிலவிய அந்த பிரம்மாண்டமான எழுச்சியும் எதிர்பார்ப்பும், கடந்த ஒரு மாத காலமாக நிலவி வரும் மௌனத்தால் மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளதோ என்ற அச்சம் அவரது ஆதரவாளர்களிடையே எழுந்துள்ளது. கட்சி தொடங்கி, மாநாடு நடத்தி, கொள்கைகளை அறிவித்த கையோடு களத்தில் இறங்கி மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு மாத காலமாக அவரிடமிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கையோ அல்லது பொதுக்கூட்ட அறிவிப்போ வராதது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. ஒரு புதிய கட்சிக்கு தொடக்க காலம் என்பது மிகவும் முக்கியமானது; அந்த சமயத்தில் தலைவரின் மௌனம் எதிரிகளுக்கு வாய்ப்பாகவும், தொண்டர்களுக்கு சோர்வாகவும் அமைந்துவிடும் என்பதே நிதர்சனம்.
விஜய்யின் இந்த திடீர் மௌனத்திற்கு பின்னால் அவரது ‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீடு தொடர்பான சிக்கல்களும், சிபிஐ விசாரணை தொடர்பான அச்சுறுத்தல்களும் இருக்கலாம் என்று கிசுகிசுக்கப்படுகிறது. சினிமாவில் பல தடைகளை தாண்டி வெற்றி கண்ட விஜய், அரசியலில் நுழையும்போது இத்தகைய சவால்கள் வரும் என்பதை முன்கூட்டியே கணித்திருக்க வேண்டும். ஆனால், இந்த நெருக்கடிகளால் அவர் சோர்ந்து போய்விட்டாரா அல்லது பாதுகாப்பான தூரத்தை பராமரிக்கிறாரா என்ற கேள்வி நடுநிலை வாக்காளர்களிடையே எழுந்துள்ளது. ஒரு தலைவன் என்பவன் நெருக்கடி நேரத்தில்தான் முன்னால் வந்து நிற்க வேண்டும்; ஆனால் விஜய் தற்போது திரைமறைவில் இருப்பது அவரை நம்பி வந்த கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு ஒருவித ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது எத்தனையோ மக்கள் பிரச்சனைகள் அன்றாடம் வெடித்து கொண்டிருக்கின்றன. விலைவாசி உயர்வு முதல் சட்டம் ஒழுங்கு விவகாரங்கள் வரை எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வரும் நிலையில், ‘மாற்றத்தை’ விரும்பும் ஒரு புதிய தலைவரிடமிருந்து ஒரு சிறு கண்டனம் கூட வராதது ஏன் என்று மக்கள் கேட்கின்றனர். அரசியலில் இருப்பவர்கள் ஒரு மாதம் ‘லீவ்’ எடுப்பது என்பது தற்கொலைக்கு சமமானது. மக்கள் தங்களின் பிரதிநிதியாக ஒருவரை பார்க்க விரும்பும்போது, அவர் பொதுவெளியில் தட்டுப்படாமல் இருப்பது அவரது அரசியல் எதிர்காலத்தை பாதிக்கும். மற்ற திராவிட கட்சிகளும், தேசிய கட்சிகளும் விஜய்யின் இந்த மௌனத்தை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தி, அவர் ஒரு ‘பார்ட் டைம்’ அரசியல்வாதி என்ற பிம்பத்தை உருவாக்க தொடங்கியுள்ளன.
விஜய்யை நம்பி தங்களின் எதிர்காலத்தையும், உழைப்பையும் பணையம் வைத்து பின்னால் அணிவகுத்து நிற்கும் இளைஞர் பட்டாளத்தின் கதி என்ன என்ற கேள்வி தற்போது மிக முக்கியமானது. சினிமாவில் அவர் காட்டிய வேகம் அரசியலில் மிஸ்ஸிங் ஆகிறது என்பதே பலரின் குமுறலாக உள்ளது. தனது அடுத்தகட்ட நகர்வு என்ன என்பதை தெளிவாகத் தெரிவிக்காமல் அமைதி காப்பது, கீழ்மட்ட தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. விஜய் ஒரு நீண்ட கால அரசியலை முன்னெடுக்க விரும்பினால், அவர் மக்கள் மத்தியிலேயே எப்போதும் இருக்க வேண்டும். வீதிக்கு வந்து போராடாவிட்டாலும், குறைந்தபட்சம் மக்கள் சந்திக்கும் துயரங்களுக்கு இணையதளம் வாயிலாகவாவது தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டியது ஒரு தலைவரின் கடமையாகும்.
“வெளியே வாங்க விஜய்… வருவது வரட்டும் பார்த்துக் கொள்ளலாம்!” என்று அவரது தீவிர விசுவாசிகள் தற்போது சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுக்க தொடங்கியுள்ளனர். சினிமா வேறு, அரசியல் வேறு என்பதை விஜய் உணர வேண்டிய தருணம் இது. சினிமாவில் ரீ-டேக் எடுக்கலாம், ஆனால் அரசியலில் தவறவிடும் ஒவ்வொரு நொடியும் ஒரு பெரும் சரிவை ஏற்படுத்தும். அரசு மற்றும் அதிகார வர்க்கத்தின் நெருக்கடிகளுக்கு அஞ்சி ஒதுங்கி நின்றால், மக்கள் அவரை ஒரு பலவீனமான தலைவராகவே கருதுவார்கள். போராட்டங்களும், வழக்குகளும், நெருக்கடிகளுமே ஒரு தலைவனை பக்குவப்படுத்தும்; அதை தவிர்த்துவிட்டு ஒரு பாதுகாப்பான அரசியலை செய்ய நினைப்பது தமிழக மண்ணில் எடுபடாது.
இறுதியாக, விஜய் தனது மௌனத்தை கலைக்க வேண்டிய நேரம் இது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஒவ்வொரு நாளும் முக்கியமானது. ஒரு மாதம் என்பது ஒரு தலைவருக்கு நீண்ட காலம். தனது கொள்கை எதிரிகள் என யாரை குறிப்பிட்டாரோ, அவர்கள் விஜய்யின் பலவீனங்களை ஆராய்ந்து காய்களை நகர்த்தி வருகின்றனர். இந்த சூழலில், விஜய் மீண்டும் களத்திற்கு வந்து தனது ஆவேசமான பேச்சுகளாலும், மக்கள் நல திட்டங்களாலும் தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அப்படி செய்ய தவறினால், அவர் அரசியலில் ஏற்படுத்திய அந்த மிகப்பெரிய அதிர்வலைகள் ஒரு சிறிய சலசலப்பாக மட்டுமே சுருங்கிவிடும் அபாயம் உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
