வலையை விரிச்சது இஸ்ரேல்… ஆனா அதுல வந்து சிக்குனது வல்லரசு அமெரிக்கா! அமெரிக்காவை முட்டுச்சந்தில் நிறுத்திய இஸ்ரேல்.. 4 நாளில் ஈரானை பணிய வைத்துவிடலாம் என்று தப்புக்கணக்கு போட்ட டிரம்ப்.. இப்ப போரை நிறுத்தினா ஈரானிடம் தோற்றதாக மாறிவிடும்.. போரை நிறுத்தாவிட்டால் அமெரிக்க பொருளாதாரம் பாதாளத்திற்கு செல்லும்.. எரிவாயு பிரச்சனையால் உலகம் முழுவதும் அமெரிக்காவின் பிடிவாதத்திற்கு கண்டனம்.. டிரம்ப்பே பதவி விலகு என்ற கோஷம் எழ அதிக வாய்ப்பு?

மேற்காசியாவில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர் தற்போது உலக நாடுகளை ஒரு பெரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. இந்த போர் தேவையற்றது என்றும், இஸ்ரேல் விரித்த வலையில் அமெரிக்கா…

trump

மேற்காசியாவில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர் தற்போது உலக நாடுகளை ஒரு பெரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. இந்த போர் தேவையற்றது என்றும், இஸ்ரேல் விரித்த வலையில் அமெரிக்கா சிக்கிக்கொண்டு இப்போது அதிலிருந்து வெளியேற முடியாமல் ஒரு முட்டுச்சந்தில் தவித்து வருவதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்கா தனது ராணுவ பலத்தை கொண்டு ஈரானை எளிதில் பணிய வைத்துவிடலாம் என்று நினைத்த போதிலும், போர் தொடங்கி 12 நாட்கள் கடந்த பின்னரும் ஈரான் தனது தாக்குதல்களை குறைப்பதாக தெரியவில்லை. மாறாக, ஒவ்வொரு நாளும் புதிய வகை ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் கொண்டு இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவது போரின் தீவிரத்தை அதிகப்படுத்தியுள்ளது.

இந்த போரின் நேரடி விளைவாக கத்தார் நாடு தனது திரவ இயற்கை எரிவாயு உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது உலக சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியாவை போன்ற எரிசக்தி இறக்குமதியை சார்ந்திருக்கும் நாடுகளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு தலைதூக்க ஆரம்பித்துள்ளது.

மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த போரை ஒரு சிறிய சுற்றலா பயணம் போல மிக சாதாரணமாகச் சித்தரிப்பது உலக நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. போரில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் மற்றும் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு வரும் சூழலிலும், ஈரானின் ஆயுத பலத்தை முழுமையாக அழிப்பதே தமது இலக்கு என்று ட்ரம்ப் கூறி வருகிறார். ஆனால், ஈரானை பொறுத்தவரை இது வெறும் ஆயுத மோதல் மட்டுமல்ல, அமெரிக்காவிற்கு உலகளாவிய பொருளாதார நெருக்கடி மூலம் அழுத்தம் கொடுக்கும் ஒரு உத்தியாகும். குறிப்பாக ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டால், அது உலகளாவிய கச்சா எண்ணெய் விலையை விண்ணை தொடச் செய்யும் என்பதுடன் அமெரிக்காவின் உள்நாட்டு பொருளாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும்.

வளைகுடா நாடுகள் இந்தப் போரில் நேரடியாக ஈடுபடாமல் விலகி நிற்பது அமெரிக்காவிற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் போன்ற நாடுகள், இது இஸ்ரேலின் போர் என்றும் இதில் தங்களை இழுத்து விடுவது முறையல்ல என்றும் வெளிப்படையாக பேச தொடங்கியுள்ளன. அமெரிக்காவுடன் தங்களுக்கு பாதுகாப்பு ரீதியான பங்களிப்பு இருந்தாலும், அது ஈரானுடன் ஒரு நீண்டகால போரில் ஈடுபடுவதற்கான ஒப்புதல் அல்ல என்பதை அவை தெளிவுபடுத்தியுள்ளன. போர் நீடித்தால் கடந்த பல ஆண்டுகளாக தாங்கள் கட்டமைத்த பொருளாதார வளர்ச்சி சிதைந்துவிடும் என்பதை உணர்ந்துள்ள வளைகுடா நாடுகள், இப்போது அமெரிக்காவை அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்பும்படி வலியுறுத்தி வருகின்றன.

அமெரிக்காவிற்குள்ளேயே இந்த போருக்கு எதிராக குரல்கள் எழ தொடங்கியுள்ளன. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான ரகசிய கூட்டத்தில், இந்த போருக்கான தெளிவான இலக்கு அமெரிக்க அரசாங்கத்திடம் இல்லை என்பது அம்பலமாகியுள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்களையோ அல்லது அந்த நாட்டின் ஆட்சி மாற்றத்தையோ இலக்காக கொள்ளாமல், வெறும் ஏவுகணை தளங்களை மட்டும் அழிப்பதால் போருக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்று கிரிஸ் மர்பி போன்ற எம்பிக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் இந்த போரில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதை தனது மௌனத்தின் மூலம் வெளிப்படுத்தி வருவது ட்ரம்ப் நிர்வாகத்திற்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை காட்டுகிறது.

தற்போதைய சூழலில், ஈரான் ஒரு செஸ் விளையாட்டை போல மிக நிதானமாகவும் தந்திரமாகவும் காய்களை நகர்த்தி வருகிறது. ஆயுத பலத்தில் அமெரிக்காவை விட குறைவாக இருந்தாலும், புவியியல் ரீதியான சாதகங்கள் மற்றும் ஹவுதி படைகள் போன்ற தனது ஆதரவு அமைப்புகளை பயன்படுத்தி உலக வர்த்தகத்தை தடுத்து அமெரிக்காவை அடிபணிய வைக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளது. இந்தியா போன்ற நாடுகள் தங்களின் வெளியுறவு கொள்கையில் அமெரிக்காவை அதிகம் சார்ந்து இருப்பதால், இந்த நெருக்கடியான காலத்தில் எரிசக்தி தட்டுப்பாடு போன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. போர் மேலும் சில மாதங்கள் நீடித்தால், அது உலக நாடுகளின் பொருளாதார கட்டமைப்பையே தலைகீழாக மாற்றிவிடும் என்பதால், அமெரிக்கா ஒரு கௌரவமான வழியில் இந்த போரிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.