தினசரி வேலைகளில் நம்முடைய சாக்ஸ்களை சுத்தம் செய்வது பலருக்கு சிரமமான ஒன்றாக இருக்கலாம். ஆனால், சாக்ஸ்களை முறையாக சுத்தம் செய்யாவிட்டால், துர்நாற்றம் மட்டுமல்லாமல் பல நோய்த்தொற்றுக்களும் ஏற்பட வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். சாக்ஸ்களை சுத்தமாக வைத்து கொள்வது எப்படி என்பது குறித்து விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
நுண்ணுயிர்களின் புகலிடம்.. கிருமிகளின் இருப்பிடம்:
நமது கால்கள், பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் ‘மினியேச்சர் மழைக்காடுகள்’ என்று அழைக்கப்படுகின்றன. ஒரு சதுர சென்டிமீட்டர் தோலில் 10 முதல் 100 மில்லியன் நுண்ணுயிர் செல்கள் வாழ்கின்றன. நமது கால்கள் சூடாகவும், இருட்டாகவும், ஈரப்பதமாகவும் இருப்பதால் பாக்டீரியாக்கள் இங்கு செழித்து வளர்கின்றன.
கிருமிகளை சேகரிக்கும் சாக்ஸ்கள்:
நாம் நடக்கும் இடங்களிலிருந்தும், செல்லப்பிராணிகளின் முடியிலிருந்தும், புழுதியிலிருந்தும் பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் அவற்றின் வித்துக்கள் போன்றவற்றை சாக்ஸ்கள் ஒரு ‘நுண்ணுயிர் கடற்பாசி’ போல உறிஞ்சுகின்றன. ஒரு ஆய்வில், வெறும் 12 மணி நேரம் பயன்படுத்தப்பட்ட சாக்ஸ்களில் தான் மிக அதிக அளவில் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
எனவே சாக்ஸ்களை சுத்தம் செய்வதில் பெரும் கவனம் வேண்டும். சாக்ஸை 60°C (140°F) வெப்பநிலையில், நொதி அடிப்படையிலான சோப்புப் பொடியை பயன்படுத்தி துவைக்க வேண்டும். 60°C வெப்பநிலை, சாக்ஸ்களில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகளை அழித்துவிடும். நமது கால்களின் வெப்பநிலையில் உயிர்வாழ பழகியிருக்கும் கிருமிகள், இந்த அதிக வெப்பத்தை தாங்காது.
உங்கள் வாஷிங் மெஷின் இயந்திரத்தில் 60°C வெப்பநிலையில் துவைக்க வாய்ப்பில்லை. எனவே துவைத்த பிறகு சாக்ஸ்களை சூடான அயர்ன் பாக்ஸ் கொண்டு அயர்ன் செய்வது சிறந்தது. நீராவி பயன்படுத்தினால், வெப்பம் சாக்ஸின் உள்ளே ஆழமாக சென்று, கிருமிகள் மற்றும் பூஞ்சைகளை அழித்துவிடும்.
சாக்ஸினால் ஏற்படும் நோய்த்தொற்றுக்கள்.. சருமத் தொற்றுக்கள்:
அசுத்தமான சாக்ஸ்கள் மூலம் பலவிதமான நோய்த்தொற்றுக்கள் பரவக்கூடும். ஸ்டாபிலோகோகஸ் போன்ற பாக்டீரியாக்கள் சருமத்தில் கொப்புளங்களையும், சீரிய சந்தர்ப்பங்களில் ரத்தத்தில் நச்சுத்தன்மையையும் ஏற்படுத்தும்.
பூஞ்சை தொற்றுகள்:
மனித பாப்பிலோமா வைரஸால் ஏற்படும் மருக்கள், மற்றும் ‘அத்லெட்ஸ் ஃபுட்’ எனப்படும் பூஞ்சைத் தொற்றுகள் போன்றவை அழுக்கு சாக்ஸ்கள் மூலம் பரவுகின்றன. ஒரு நாள் முழுவதும் பயன்படுத்திய சாக்ஸ்களை தினமும் மாற்றுவது, மற்றும் அவற்றை சரியாகச் சுத்தம் செய்வது மிகவும் முக்கியம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
