முன்பெல்லாம் நாம் வாங்கும் டி-சர்ட்டுகளில் நமக்குப் பிடித்த நடிகர்கள் படம், தலைவர்கள் படம், விளையாட்டு வீரர்கள் படம், நல்ல வசனங்கள் ஆகியவற்றைத்தான் பிரிண்ட் செய்து விற்பனை செய்வர். தற்போது காமிக்ஸ் கதாபாத்திரங்கள், WWF வீரர்கள் என மாறிவிட்டது. இதன் உச்சகட்டமாக இளைஞர்களிடம் தவறான பாதையை ஊக்குவிக்கம் வகையில் நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் உருவம் பொறித்த டி-சர்ட்டுகள் விற்பனை செய்தது பிரபல இணைய வழி வணிக நிறுவனமான மீஷோ.
அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் லாரன்ஸ் பிஷ்னோய் உருவம் பொறித்த டி-சர்ட்டுகளை ரூ. 168 முதல் விற்க ஆன்லைனில் ஆர்டர்கள் குவிந்தது. ஆனால் எந்த அளவிற்கு ஆர்டர்கள் குவிந்ததோ அந்த அளவிற்கு எதிர்ப்புகளும் குவிந்தது. இதனால் மீஷோ நிறுவனம் கடும் கண்டனத்தைச் சந்தித்தது.
சியோமி, பேடிஎம் மூத்த அதிகாரிகள் ராஜினாமா..! ஒரே நாளில் நடந்த திடீர் மாற்றம்..!
தொடர் எதிர்ப்புகளால் தாதா லாரன்ஸ் பிஷ்னோய் உருவம் பொறித்த டி-சர்ட் விற்பனையை மீஷோ நிறுவனம் நிறுத்துவதாக தற்போது அறிவித்திருக்கிறது. இந்தியாவின் வட மாநிலங்களில் மிகப்பெரும் தாதாவாக வலம் வந்து தற்போது சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் உலக அளவில் கடத்தல், கொலை, பல்வேறு தாதா கும்பல்களுடன் மிகப்பெரிய நெட்வொர்க்கை ஏற்படுத்தி வைத்திருப்பவர்.
பல்வேறு வழக்குகள் இவர் மீது நிலுவையில் இருக்கிறது. இவர் உருவம் பொறித்து அதன்மீது கேங்ஸ்டர், தி ரியல் ஹீரோ போன்ற வாசகங்களுடன் டி-சர்ட்டுகளை விற்பனை செய்ததால் மீஷோ நிறுவனத்திற்கு எதிர்ப்புகள் வலுக்க லாரன்ஸ் பிஷ்னோய் டி-சர்ட்டுகள் விற்பனையை நிறுத்தியது.
எனினும் இதர இணைய வழி வர்த்தகத்தில் லாரன்ஸ் பிஷ்னோய் டி-சர்ட்டுகள் விற்பனையாகிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.