மெடிக்கல் பாலிசி என்பது தற்போது மிகவும் இன்றியமையாத ஒன்றாக கருதப்படும் நிலையில், இது குறித்த விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவர் எவ்வளவு தான் சேமித்து வைத்திருந்தாலும், அந்த சேமிப்பு பணம் முழுவதும் ஒரே நாளில் கரைந்து விடும் என்றால், அது கண்டிப்பாக மெடிக்கல் செலவாக தான் இருக்கும். எனவே, எதிர்பாராமல் வரும் மெடிக்கல் செலவுகளை சமாளிக்க, மெடிக்கல் பாலிசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஒருவர் ஒரு மெடிக்கல் பாலிசி மட்டும் எடுத்தால் போதுமா அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பாலிசி எடுத்தால், அனைத்து பாலிசிகளையும் ஒரே நேரத்தில் க்ளெய்ம் செய்ய முடியுமா என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த சந்தேகத்திற்கு பதில் அளித்த மெடிக்கல் பாலிசி நிபுணர்கள், ஒருவர் எத்தனை பாலிசிகள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்றும், ஒரே நேரத்தில் அத்தனை பாலிசிகளிலும் க்ளைம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
உதாரணமாக ஒருவர் அலுவலகத்தின் மூலம் ரூ.3 லட்சத்திற்கு ஒரு மெடிக்கல் பாலிசியும், தனியாக ரூ.3 லட்சத்திற்கு ஒரு மெடிக்கல் பாலிசியும் எடுத்திருந்தால், அவருக்கு ஏதேனும் மெடிக்கல் செலவு ஏற்பட்டால், இரு பாலிசிகளில் இருந்து அவர் க்ளெய்ம் பெற முடியும். உதாரணமாக, சிகிச்சைக்கு 4 லட்சம் ரூபாய் தேவைப்படும் போது, ஒரு பாலிசியில் இருந்து மூன்று லட்ச ரூபாய், இன்னொன்றில் இருந்து ஒரு லட்ச ரூபாய் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. எனவே, ஒன்றுக்கும் மேற்பட்ட பாலிசி எடுப்பது தவறல்ல.