பெங்களூரைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள், இதயம் மற்றும் தோல் ஆகியவை தானமாக வழங்கப்பட்டதால், பல நோயாளிகள் பயனடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த ராகேஷ்குமார் என்பவர் மருத்துவத்துறையில் பொறியாளராக இருந்தார். மார்ச் 15ஆம் தேதி தனது நண்பரை பார்த்துவிட்டு வருவதாகக் கூறி இருசக்கர வாகனத்தில் தனது தாயிடம் விடைபெற்றுப் புறப்பட்டார். அந்த நேரத்தில், அவர் விபத்துக்குள்ளாகி படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடினார்கள். ஆனால், அவர்களின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்து, அவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே தனது கணவரை சில ஆண்டுகளுக்கு முன் இழந்த ராகேஷ்குமாரின் தாய் ரேகாராவ், மகனின் மூளைச்சாவு செய்தியை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தார். இருந்தாலும், தனது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்யத் தீர்மானித்து, மருத்துவர்களிடம் ஒப்புக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து, ராகேஷின் கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு கண்கள், இதயம் மற்றும் தோல் ஆகியவை தானமாக பெறப்பட்டன. அவரது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள், அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலேயே இருந்த இரண்டு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டது. கண்கள், இதயம் போன்றவை உடல் உறுப்புக்காகக் காத்திருந்தவர்களுக்கு பொருத்தப்பட்டது. விக்டோரியா மருத்துவமனையில் தீக்காயம் அடைந்து தோல் அறுவை சிகிச்சைக்காக தேவைப்பட்ட நோயாளிக்கு, அவரது தோல் தானமாக வழங்கப்பட்டது.
மருத்துவத்துறையில் பொறியாளராக இருந்த ராகேஷ்குமார், இறந்த பின்னரும் சில உயிர்களை காப்பாற்ற உதவியாக இருந்தது ஒரு விசித்திரமான ஒற்றுமையாக பார்க்கப்படுகிறது.