வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்காத பர்கர்களை அறிமுகம் செய்வதாக மெக்டொனால்ட் நிறுவனம் அறிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்து சமூக தலைவர்களின் கமெண்ட்கள் பதிவாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜூலை மாத இறுதி மற்றும் ஆகஸ்ட் மாத தொடக்கம் என்பது வட இந்தியாவில் உள்ள இந்துக்களின் புனிதமான மாதமாக கருதப்படுகிறது. சிவபெருமானுக்கு உரிய மாதம் என்றும் இதை ஷரவண மாதம் என்றும் அழைத்து வருகின்றனர்.
இந்த மாதத்தின்போது இந்துக்கள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவனுக்கும், ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பார்வதிக்கும் விரதமிருப்பது வழக்கமான ஒன்று. மேலும் விரதமிருக்கும் நாட்களில் அவர்கள் பூண்டு மற்றும் வெங்காயம் சாப்பிட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஷரவண மாதத்தை முன்னிட்டு மெக்டொனால்ட் நிறுவனம் பூண்டு மற்றும் வெங்காயம் இல்லாத பர்கரை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு ஒரு பக்கம் பாராட்டுக்கள் குவிந்து வந்தாலும் இன்னொரு பக்கம் கண்டனமும் குவிந்து வருகிறது.
ஒவ்வொரு மதத்துக்கு ஏற்ற வகையில் உணவு தயாரிப்பது என்பது சர்ச்சையை ஏற்படுத்தும் செயல் என்றும் பொதுவான உணவு மட்டுமே தயாரிக்க வேண்டும் என்றும் பலட் கருத்து கொடுத்து வருகின்றனர். ஆனால் இதற்கு ஆதரவும் அதிகரித்து வருகிறது. ஷரவண மாதத்தில் பூண்டு மற்றும் வெங்காயம் நாங்கள் சாப்பிட மாட்டோம் என்பதால் அவை கலக்காத பர்கர் அறிமுகம் செய்வது எங்களுக்கு மகிழ்ச்சி என்றும் சிலர் பதிவு செய்து வருகின்றனர்.