தமிழ்நாட்டில் காதல் திருமணம் செய்யப் போபவர்களின் முதல் சாய்ஸ்-ஆக இருப்பது பத்திரப்பதிவு அலுவலகங்கள்தான். சட்டப்படி 18 வயது நிரம்பிய பெண்ணும், 21 வயது நிரம்பிய ஆணும் சுயமாக திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கும் பட்சத்தில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் சட்டப்பூர்வமாக திருமணம் பதிவு செய்யப்படுகிறது.
இது மணமக்களுக்கு மிக முக்கிய திருமண ஆதாரமாகவும், எதிர்ப்புகள் எழும் சூழ்நிலையில் தற்காத்துக் கொள்ளவும் வழிவகை செய்கிறது. பெரும்பாலும் காதலித்துத் திருமணம் செய்பவர்கள் பத்திரப் பதிவு அலுவலங்களில் தஞ்சம் புகுகின்றனர். வீட்டில் பெற்றோர்கள் திருமணங்களுக்கு சம்மதிக்காத பட்சத்தில் நண்பர்கள் துணையுடன் திருமணம் முடிக்க தகுந்த சான்றுகளுடன் பத்திரப்பதிவு அலுவலங்களை அணுகும் போது அங்கே பதிவாளர் இவர்களது ஆவணங்களைச் சரிபார்த்தும் மற்றும் சாட்சிகளின் ஆவணங்களைச் சரிபார்த்தும் திருமணத்தினை பதிவு செய்து தருகிறார்.
இவ்வாறு திருமணங்களைப் பதிவதற்கு பதிவுக் கட்டணமாக ரூ. 300 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் பத்திரப்பதிவு அலுவலங்களில் நடைபெறும் திருமணப் பதிவிற்கு ரூ. 5,000 வரை லஞ்சம் கேட்பதாகப் புகார் எழுந்துள்ளது. மேலும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் முடித்தவர்கள் அயல்நாடு செல்ல திருமணப் பதிவுச் சான்றிதழ் கட்டாயம் என்ற சூழலில் இவர்களும் திருமணப் பதிவிற்காக விண்ணப்பிக்கின்றனர். எனவே திருமணங்களைப் பதிவு செய்வதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உருவாகியுள்ளன. இதனால் பல திருமணங்கள் பதிவு செய்யப்படாமல் உள்ளது.
எனவே இந்நடைமுறைகளை எளிதாக்கும் வகையிலும், திருமணங்களை எளிதாகப் பதிவு செய்யவும் பத்திரப்பதிவுத் துறையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளது. தற்போது இ-சேவை மூலம் தமிழக அரசின் பல சான்றிதழ்கள் விண்ணப்பிக்கும் முறை நடைமுறையில் உள்ளது போல் பத்திரப்பதிவு அலுவலகம் செல்லாமலேயே திருமணம் பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களது மொபைல் போன் மூலமே சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யும் வகையில் நடைமுறைகள் மாற்றப்பட்டு தகுந்த ஆய்விற்குப் பின் திருமண சான்றிதழ் வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் திருமண சான்றிதழ் பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் அனைத்தும் களையப்படும்.
இத்திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்துள்ளது.