வாட்ஸ் அப் மூலம் அனுப்பப்படும் திருமண அழைப்பிதழ்.. இவ்வளவு ஆபத்து இருக்குதா?

By Bala Siva

Published:

 

தற்போது அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில், திருமண அழைப்பிதழை கூட நேரடியாக கொண்டு சென்று கொடுக்க நேரமில்லாமல், டிஜிட்டல் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக whatsapp மூலம் திருமண அழைப்பிதழ் அனுப்பும் வழக்கம் அதிகமாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

ஆனால் அதே நேரத்தில், whatsapp மூலம் திருமண அழைப்பிதழ் வருவதில் சில ஆபத்து இருக்கிறது என்றும் தெரிந்தவர்கள் தான் அனுப்பியிருக்கிறார்கள் என்று உறுதி செய்யாமல், நமது whatsapp எண்ணுக்கு வரும் திருமண அழைப்பிதழை டவுன்லோடு செய்ய தொடங்கினால் அதில் தீங்கிழைக்கும் ஏபிகே ஃபைல் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

தெரியாத நம்பரில் இருந்து திருமண அழைப்பிதழ் போன்ற ஏபிகே ஃபைல் வந்தால், அதை டவுன்லோட் செய்ய வேண்டாம் என்று சைபர் கிரைம் நிபுணர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார். அவ்வாறு அந்த திருமண அழைப்பிதழை டவுன்லோட் செய்து விட்டால், நமக்கே தெரியாமல் நம்முடைய மொபைலில் உள்ள டேட்டாக்கள் அனைத்தும் பறிபோய்விடும் என்றும், இதனால் நாம் சேர்த்து வைத்த பணம் மொத்தமாக இழக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

எனவே, தெரியாத நம்பரில் இருந்து திருமண நாள் அழைப்பிதழ் உள்பட எந்த ஒரு புகைப்படம் வந்தால், அதனை உடனடியாக டெலிட் செய்து விடுங்கள் என்றும் பைலை டவுன்லோட் செய்வதற்கு முன்னர் சரி பார்த்து, அது நமக்கு தெரிந்தவர் தான் அனுப்பி இருக்கிறாரா என்பதை உறுதி செய்த பின்னர் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விதவிதமான வகைகளில் சைபர் கிரைம் நபர்கள் மோசடிகள் செய்து வரும் நிலையில், கடந்த சில வாரங்களாக திருமண அழைப்பிதழ் மூலம் மோசடி செய்யப்பட்டு வருவதாக ஏராளமான புகார்கள் காவல்துறைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.