ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் டிஜிட்டல் துணை நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம், இந்தியாவில் ஜியோபிசி (JioPC) என்ற புதிய சேவையை தொடங்கியுள்ளது. இதன் மூலம் தொலைக்காட்சிகளை கிளவுட் அடிப்படையிலான தனிப்பட்ட கணினிகளாக மாற்ற முடியும். ஜியோவின் செட்-டாப் பாக்ஸ் மற்றும் இணைய இணைப்பை பயன்படுத்தி, பயனர்கள் தங்கள் டிவி திரைகளில் நேரடியாக டெஸ்க்டாப்பை அணுக முடியும்.
தற்போது இலவச சோதனை கட்டத்தில் உள்ள ஜியோபிசி சேவை, ஒருசில பயனர்களுக்கு மட்டும் கிடைக்கிறது. ஒருமுறை பதிவு செய்தவுடன், பயனர்கள் தங்கள் தொலைக்காட்சிக்கு கீபோர்டு மற்றும் மவுஸ் இணைத்து சேவையை பயன்படுத்த தொடங்கலாம். இதில் முன்னரே நிறுவப்பட்ட லிப்ரேஆபீஸ் (LibreOffice) உள்ளது. மேலும் வெப் பிரவுசர் மூலம் மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ் கூட பயன்படுத்தலாம். இருப்பினும், இந்த சேவையில் வெப்கேம்கள் அல்லது பிரிண்டர்கள் போன்ற வெளிப்புற சாதனங்கள் இப்போதைக்கு இணைக்க முடியாது.
இந்த அம்சத்தை செயல்படுத்துகின்ற ஜியோ செட்-டாப் பாக்ஸ், ஜியோவின் ஹோம் பிராட்பேண்ட் தொகுப்புகளுடன் சேர்க்கப்பட்டுள்ளது அல்லது ரூ. 5,499க்கு தனியாகவும் வாங்கலாம்.
இந்தியாவில் டிஜிட்டல் அணுகலை மேம்படுத்துவதில் ஜியோபிசி ஒரு கேம்-சேஞ்சராக இருக்கும் என்று தொழில்துறை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 488 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்ட ஜியோ, இதுவரை பயன்படுத்தப்படாத சந்தையை குறிவைக்கிறது: இந்திய குடும்பங்களில் 70% பேரிடம் டிவி உள்ளது, ஆனால் 15% பேர் மட்டுமே தனிப்பட்ட கம்ப்யூட்டர் வைத்துள்ளனர். எனவே ஜியோபிசி டிவி வைத்திருக்கும் இந்த குடும்பங்களை இலக்காக கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தவுள்ளது.
மைக்ரோசாஃப்ட் போன்ற உலகளாவிய நிறுவனங்களின் தயாரிப்புகள் அடங்கிய டெஸ்க்டாப்புகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
