அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முன்னாள் உதவியாளர் மற்றும் தீவிர வலதுசாரி செயற்பாட்டாளரான லாரா லூமர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட ஒரு தகவல், இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான வர்த்தகப்போரில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. டிரம்ப் நிர்வாகம், அமெரிக்க ஐ.டி. நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களுக்கு பணிகளை அவுட்சோர்ஸ் செய்வதை தடுக்க பரிசீலித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா, ஏற்கனவே ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது 50% வரி விதித்திருந்தது. இந்த நிலையில், அமெரிக்காவில் சிலர் இந்தியர்கள் அமெரிக்க வேலைகளைத் திருடுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த விமர்சனங்களை பிரதிபலிக்கும் விதமாக, ட்ரம்ப் நிர்வாகம், ஐ.டி. அவுட்சோர்சிங் மீது வரி விதிப்பது அல்லது தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டுப் பணியாளர்கள் மீது வரி விதிப்பது அல்லது அவுட்சோர்சிங்கை நிறுத்துவது போன்ற நடவடிக்கைகள், அமெரிக்க வேலைகளை பாதுகாக்கும் ஒரு முயற்சியாக கருதப்படுகின்றன.
டிரம்ப்பின் வர்த்தக ஆலோசகரான பீட்டர் நவாரோ போன்றோர், வெளிநாட்டு ரிமோட் ஊழியர்கள் மீது வரி விதிக்க வேண்டும் என்ற கருத்தை ஆதரித்துள்ளனர். இந்த அறிவிப்பு, இந்திய ஐ.டி. துறையில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான தானியங்கிமயமாக்கலின் (automation) அதிகரிப்பு போன்ற சவால்களுக்கு மத்தியில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஒரு கூடுதல் சுமையாக அமையும் என இந்திய ஐ.டி. நிறுவனங்கள் அஞ்சுகின்றன.
டிரம்ப் நிர்வாகம் வெளிநாட்டு பணியாளர்கள் மீது வரி விதிக்குமா அல்லது அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாடுகளுக்கு வேலைகளை வழங்குவதை நிறுத்துமா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், ஐ.டி. துறையில் ஒரு குறிப்பிடத்தக்க கொள்கை மாற்றம் ஏற்படக்கூடும் என்பது உறுதியாகியுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் இந்தியாவுக்கு அவுட்சோர்ஸிங்கை நிறுத்திவிட்டு அமெரிக்காவில் கால் செண்டர், ஐடி நிறுவனங்கள் தொடங்குவது சாத்தியமில்லை என்றும், இந்தியாவின் துணை இல்லாமல் அமெரிக்க நிறுவனங்கள் செயல்பட முடியாது என்ற எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. அவுட்சோர்ஸிங்கை நிறுத்தினால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு என்பது உண்மைதான், ஆனால் அமெரிக்காவுக்கும் அதைவிட பாதிப்பு ஏற்படும் என்பதை டிரம்ப் அரசுக்கு சுட்டிக்காட்டி வருகின்றனர். டிரம்பின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
