சமூகத்தில் பெண்களின் உழைப்பினை அங்கீகரிக்கும் வகையிலும், அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலும் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியில் முக்கிய திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி அறிஞர் அண்ணா பிறந்த நாள் அன்று காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இத்திட்டம் மகளிர் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்ற நிலையில் யார் யாருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும், எப்படி விண்ணப்பிப்பது போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. இதற்காக சிறப்பு முகாம்களும் அமைக்கப்பட்டது. அதில் பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. குறிப்பாக தகுதி வாய்ந்த மகளிருக்கு 1000 ரூபாய் கிடைக்கும் என்று அரசு அறிவித்தவுடன் பெண்களிடையே அதிருப்தி எழுந்தது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. அதில் தகுதியுடைய விண்ணப்பங்கள் விடுபட்ட பெண்களுக்கு மீண்டும் விண்ணப்பம் பெறப்பட்டு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதிக்குள் அவரவர் வங்கிக் கணக்குகளிலும், அஞ்சலக சேமிப்புக் கணக்குகளிலும் வரவு வைக்கப்படுகிறது.
இந்நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இன்று அருப்புக் கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தில் ஊரக வளர்ச்சிப் பணிகளை துவக்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், மகளிர் உரிமைத் தொகை வருகிற ஜனவரி மாதம் முதல் குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து இல்லத்தரசிகளுக்கும் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார். மேலும் முதியோர் உதவித் தொகைக்கு விண்ணப்பித்துக் காத்திருக்கும் அனைவருக்கும் விரைவில் ஆணை வழங்கப்படும் எனவும் அமைச்சர் கூறியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை பெறாத பெண்கள் அமைச்சரின் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.