மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் தொகுதியில் சுரங்கம் அமைப்பதற்கு இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்தை தகுதியான நிறுவனமாக மத்திய சுரங்கத் துறை தேர்வு செய்து அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பகுதியில் கவட்டையம்பட்டி, எட்டிமங்கலம், ஏ.வல்லாளபட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி மற்றும் நரசிங்கம்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இதில் அரிட்டாபட்டி ஒரு பல்லுயிர்ப் பெருக்க வரலாற்றுத் தலமாக விளங்கி வருகிறது.
மேலும் அருகில் குடைவரைக் கோயில்கள், சிற்பங்கள், சமணச் சின்னங்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள் மற்றும் பஞ்சபாண்டவர் கல் படுக்கைகள் உள்ளிட்ட தொல்பொருள் நினைவுச் சின்னங்களும் உள்ளன. எனவே இந்தப் பகுதியில் சுரங்க நடவடிக்கை மேற்கொண்டால் அது பல சேதங்களை விளைவிக்கும்.
பொங்கல் கோலம்.. ஜல்லிக்கட்டு செல்பி.. பொங்கல் போட்டிகளை அறிவித்த தமிழக அரசு..
எனவே இத்திட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் பல்வேறு கட்சித் தலைவர்களும் இத்திட்டத்தினை கைவிடுமாறும், இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர். மேலும், மக்கள் தொகை அதிகம் உள்ள சுற்றியுள்ள கிராமங்களில் சுரங்கம் தோண்டுவது கண்டிப்பாக இக்கிராமங்களில் உள்ள மக்களை வெகுவாக பாதிக்கும் என்றும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் உள்ள அப்பகுதி மக்களுக்கு மத்திய அரசின் இந்த நடவடிக்கை மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். எனவே, இந்தப் பகுதிகளில் இதுபோன்ற சுரங்கத் தொழிலை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது எனவும் உறுதிபடத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இத்திட்டத்திற்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்த வேளையில் இன்று காலை ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் டங்ஸ்டன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள சுற்றியுள்ள கிராம மக்களைத் திரட்டி மதுரை நோக்கி பேரணியாகச் செல்ல முடிவெடுத்தனர்.
இதனால் காலை முதலே 4 வழிச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படத் தொடங்கியது. இதனால் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் 11 கிராம மக்களும் அணிவகுத்துச் சென்றதால் மதுரையே ஸ்தம்பித்தது. பொதுமக்கள் சாரை சாரையாக நடந்தும், வாகனங்களிலும் சென்றது சினிமாவையே மிஞ்சியது போல் இருந்தது.
மேலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் கடையடைப்புப் போராட்டமும் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாலையில் தமுக்கம் மைதானத்தில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டமும் நடைபெற உள்ளது.