தினமும் 300 ரூபாய் சம்பாதிக்கும் ஏழை தொழிலாளி ஒருவருக்கு மிகப்பெரிய மதிப்புடைய வைரம் கிடைத்ததை அடுத்து தற்போது அவர் 80 லட்சத்திற்கு சொந்தக்காரர் ஆகியுள்ளது அதிர்ஷ்டத்தின் உச்சமாக பார்க்கப்படுகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் தினமும் 300 ரூபாய் வருமானம் பெற்று வருவதாகவும் அவருக்கு நிறைய கடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் 40 வயதான அந்த நபர் வைரம் தோண்டும் ஒப்பந்தத்தை எடுத்துள்ளதாக தெரிகிறது.
இந்த ஒப்பந்தத்தின் படி வைரம் கண்டுபிடித்தால் அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் அரசு எடுத்துக் கொண்டு அந்த வைரத்தை கண்டுபிடித்தவருக்கே வழங்கப்படும் என்பதுதான் ஒப்பந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகேஷ் என்ற அந்த கூலி தொழிலாளி விடாமுயற்சியுடன் தோண்டியபோது அவரது கண்களில் திடீரென ஒரு மின்னல் ஏற்பட்டது. அவர் கண்ணில் தெரிந்த வைரத்தை அவர் எடுத்து பார்த்தபோது மிகவும் பிரகாசமாக இருந்தது. இதனை அடுத்து அந்த வைரத்தை மதிப்பிடும் இடத்திற்கு அவர் சென்றபோது அது 19.22 காரட் சுத்தமான வெள்ளை வைரம் என்று தெரிய வந்ததாகவும் 80 லட்சம் மதிப்புடையது என்றும் தெரியவந்தது.
கடந்த 1961 ஆம் ஆண்டில் 54 காரட் வைரம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் 2018 ஆம் ஆண்டு 42 காரட் வைரம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதனை அடுத்து மிகப்பெரிய மதிப்புடைய வைரம் தற்போது தான் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து ராகேஷ் மிகவும் மகிழ்ச்சி அடைந்து அரசுக்கு சேர வேண்டிய பணத்தை கட்டி விட்டு மீதமுள்ள பணத்தை வைத்து தன்னுடைய குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பகிர்ந்து கொள்வதாக கூறியுள்ளார்.
தினமும் 300 ரூபாய்க்கு வேலை செய்து கொண்டிருந்த கூலி தொழிலாளிக்கு திடீரென 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைரம் கிடைத்ததை அடுத்து அவருடைய குடும்பமே செல்வ செழிப்பாக மாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.