SN Subramanyan about 90 Hours work : தனியார் வேலையோ அல்லது அரசு நிறுவனத்தில் பணிபுரியும் ஆளோ எதுவாக இருந்தாலும் வேலை என்பதே இன்றியமையாத ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் நாம் திருமணம் செய்து குடும்பம் நடத்துவதற்கு பணம் வேண்டும் என்றும் அதற்காக வேலை மிக முக்கியமானதாகவும் இருந்து வந்தது. ஆனால் இன்று பொருளாதார உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் ஒருவர் தனியாக வாழ்வதற்கே பணம் என்ற விஷயமும், வேலை என்பதும் ஒரு அத்தியாவசிய தேவையாக பார்க்கப்படுகிறது.
இதனால் பெரும்பாலும் வேலை இல்லை என்றாலே அவர்களின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி அனைவரது மனதிலும் அச்சமாகவே இருந்து வருகிறது. முடிந்த வரையிலும் படித்து முடித்தவுடன் ஏதாவது ஒரு வேலையில் ஏறி விட வேண்டும் என்பதே பலரின் குறைந்தபட்ச லட்சியமாக இருக்கும் சூழலில் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் விடுமுறை வேண்டும் என்பதும் அவர்களது மன அழுத்தத்தை சிறந்த முறையில் வைத்திருக்க உதவி வருகிறது.
மன அழுத்தத்தால் பிரச்சனைகள்
இன்று பல ஐடி மற்றும் தனியார் நிறுவனங்களில் சிறை கைதிகளை போல ஊழியர்களை நடத்தி வரும் சூழலில் வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் விடுமுறை என்பதை தாண்டி சில மணி நேரங்கள் தங்களுக்கு தனிப்பட்ட நேரம் கிடைத்தாலே போதும் என்ற நிலை உள்ளது. இதற்கிடையே, வேலையில் மட்டுமே மூழ்கி தனிப்பட்ட வாழ்க்கையை மறந்து பலரும் மன அழுத்தத்தில் சிக்கி நோய் வாய்ப்பட்டு உயிருக்கே ஆபத்தான சூழலும் இருந்து வருகிறது.
இதனால், பல இடங்களில் வேலை மற்றும் தனிப்பட்ட நேரம் உள்ளிட்டவற்றை சமநிலையில் பார்த்துக் கொள்வது தான் மன அழுத்தத்தில் ஆழ்ந்து போகாமல் தடுக்கும் என்றும் பல நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் சில தொழிலதிபர்கள் வாரத்திற்கு ஒரு ஊழியர் 80 மணி நேரம் வரை வேலை பார்க்க வேண்டுமென தொழில் திமிரில் பேசி சர்ச்சையில் சிக்கி வருகின்றனர்.
90 மணிநேர வேலை
அப்படி ஒரு சூழலில் தான் L & T நிறுவனத்தின் தலைவரான எஸ். என். சுப்பிரமணியனும் ஒரு கருத்தை பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார். “ஞாயிற்றுக்கிழமைகளிலும் உங்களை வேலை செய்ய வைக்க முடியவில்லை என நான் வருந்துகிறேன். ஏனென்றால் நானும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்கிறேன். அன்று வீட்டில் இருந்து என்ன செய்ய போகிறீர்கள்?.
எத்தனை நேரம் உங்களது மனைவியையே பார்த்துக் கொண்டிருக்க முடியும். எத்தனை நேரம் மனைவிகள் கணவன்மார்களை பார்த்துக் கொண்டே இருப்பார்கள்?. அலுவலகம் வந்து வேலையை பாருங்கள்” என எஸ். என். சுப்ரமணியன் தனது ஊழியர்களுடன் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. அதே போல, வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்யும் படியும் சுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்.
குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க முடியாமல் பலரும் திணறி வர, ஒரு நிறுவனத்தின் தலைவர் பேசிய பேச்சு பலரையும் கொந்தளிக்க வைத்துள்ளது.