சேலம்: போக்குவரத்து போலீசார் விதிக்கும் ஆன்லைன் அபராதங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட லாரி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்பட்டு வரும் நிலையில். சுமார் 4 லட்சம் லாரிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், 1 லட்சம் லாரிகள் வட மாநிலங்களுக்கும் சென்று வருவதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். இந்த தொழிலில் டிரைவர்கள், கிளீனர்கள், பாரம் ஏற்றி, இறக்குபவர்கள் என 8 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனிடையே டீசல் மற்றும் உதிரிபாகங்கள் விலை உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், போக்குவரத்து போலீசார் விதிமுறைகளை மீறி விதிக்கும் ஆன்லைன் அபராதத்தால் லாரி தொழில் மேலும் பாதிப்படைய கூடிய நிலை ஏற்பட்டிருப்பபதாக கவலை தெரிவித்தனர் நிறுத்தி வைக்கப்படும் லாரிகளுக்கும் ஆன்லைன் மூலம் அடிக்கடி அபராதம் விதிக்கப்படுவதற்கு லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் தனராஜ் கூறுகையில், டீசல் உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் லாரி தொழில் முடங்கி உள்ளது. இதனால் லாரிகளை இயக்க முடியாமல் லட்சக்கணக்கான லாரிகள் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கும் நிலை உள்ளது. ஆனால் ஏதாவது ஒரு காரணத்தை கூறி லாரிகளுக்கு போக்குவரத்து போலீசார் அடிக்கடி அபராதம் விதிப்பது நடக்கிறது. மேலும் லோடு ஏற்றி இறக்கும் போதும் லாரிகளுக்கு போலீசார் அபராதம் விதிக்கிறார்கள்.
இதுதவிர வணிக நிறுவனங்கள் முன்பு, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் லாரிகளுக்கு சில நேரங்களில் வாரத்திற்கு இருமுறை கூட ஒரே லாரிக்கு போக்குவரத்து போலீசார் ஆன்லைனில் அபராதம் விதிக்கிறார்கள். காலாண்டு வரி செலுத்தும் போது அபராதம் விதிப்பதே எங்களுக்கு தெரியவருகிறது. ஏற்கனவே அந்த வரியை செலுத்த முடியாமல் லாரி உரிமையாளர்கள் சிரமம் அடைந்து வரும் நிலையில், ஆன்லைன் அபராதம் விதிப்பு கூடுதல் சுமையாகிறது.
அபராதம் விதிப்பு குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இனிவரும் காலங்களில் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட லாரி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளோம். இதற்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் நடைபெறும் மகாசபை கூட்டத்தில் கலந்து பேசி அறிவிக்கப்படும்” என்றார்.