ஆன்லைன் மூலம் மோசடி செய்யும் கும்பலை சேர்ந்தவர்கள், காவல்துறையினர் மற்றும் சைபர் கிரைம் அதிகாரிகளை விட பயங்கரமாக யோசித்து வருகின்றனர். தற்போது, இந்த மோசடியாளர்கள் லிங்க்டின் உள்ளிட்ட வேலை வாய்ப்பு சமூக வலைதளங்களிலும் நுழைந்துவிட்டதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோசடியாளர்கள் போலியான வேலை வாய்ப்பு அறிவிப்புகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்கின்றனர். இந்த அறிவிப்பை பார்த்து, வேலையில்லாத நபர்கள் விண்ணப்பிக்கும் போது, மோசடியாளர்கள் வீடியோ கால் மூலம் தொடர்பு கொள்கின்றனர்.
வீடியோ காலை டவுன்லோட் செய்ய அனுமதிக்கும்படி கூறி, அதை பயன்படுத்தி நம்முடைய செல்போனில் உள்ள முக்கியமான விவரங்களை ஹேக் செய்கின்றனர். குறிப்பாக, வங்கி விவரங்கள், ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற தனிப்பட்ட தகவல்களை திருடுகின்றனர். அதன் பிறகு, நம்முடைய வங்கி கணக்கிலிருந்து மோசடியாக பணத்தை எடுத்துக் கொள்கின்றனர்.
எனவே, லிங்க்டின் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேலை வாய்ப்பு குறித்த விளம்பரம் வந்தால், அது உண்மையானதா என்பதை உறுதி செய்த பிறகு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல் வீடியோ கால் மூலம் பேச வருபவர்களிடம் எந்த விதமான ஆவணங்களையும் வழங்கக்கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.