லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ஈரானின் ஆதரவுடன் தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், ஈரான் தூண்டுதலால் இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது, இஸ்ரேல் ராணுவமும் அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வந்த நிலையில் இஸ்ரேலின் உளவு அமைப்புகள் இதை கண்காணித்து, ஸ்மார்ட்போன்களின் மூலம் இவர்களின் இருப்பிடங்களை கண்டுபிடித்து தாக்குதல் நடத்தின. இதனால், ஹிஸ்புல்லா சில ஆண்டுகளுக்கு முன்பு பேஜர் மற்றும் வாக்கி-டாக்கி போன்ற சாதனங்களை பயன்படுத்த ஆரம்பித்தது.
இதனை அறிந்த இஸ்ரேல் உளவுத்துறை, ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் 3 போலி நிறுவனங்களை தொடங்கியது. அவற்றில் ஒன்றான “பிஏசி கன்சல்டிங்” நிறுவனம், தைவானில் உள்ள கோல்டு அப்பல்லோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, பேஜர்களை உருவாக்கியதாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த பிப்ரவரியில், பல்கேரியாவில் பதிவு செய்யப்பட்ட நார்டா குளோபல் லிமிடெட் என்ற நிறுவனம், பிஏசி கன்சல்டிங் நிறுவனத்திடமிருந்து பேஜர்களை வாங்கி, அவற்றை ஹிஸ்புல்லாவிற்கு வழங்கியது. இந்த நார்டா குளோபல் நிறுவனத்தின் தலைவராக உள்ள ரென்சன் என்பவர் கேரளாவில் உள்ள வயநாடை பூர்வீகமாக கொண்டவர். அவர் தற்போது நார்வே குடியுரிமை பெற்றுள்ளதாகவும், இஸ்ரேல் நாட்டுடன் நெருக்கமான தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
செப்டம்பர் 17-ஆம் தேதி, ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பயன்படுத்திய 5,000 பேஜர்கள் வெடித்து சிதறிய சம்பவம் நிகழ்ந்தது. இதற்குப் பிறகு, ரென்சன் திடீரென மாயமாகி விட்டார். அவர் அமெரிக்காவில் பதுங்கி இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக பெல்ஜிய பொலிஸார் நடத்திய விசாரணையில், ரென்சன் நடத்திவந்த நார்டா குளோபல் நிறுவனம் போலியானது என்பது தெரியவந்துள்ளது.
ரென்சனின் தந்தை ஜோஸ், கேரளாவின் வயநாடு மாவட்டம் மானந்தவாடியில் தையல் தொழிலாளியாக உள்ளார். அவர் “எனது மகன் 10 ஆண்டுகளாக நார்வேயில் வசிக்கிறார், ஆனால் அவர் என்ன வேலை செய்கிறார் என்பது எனக்குத் தெரியாது” என கூறியுள்ளார். ரென்சனை கைது செய்து விசாரித்தால், பேஜர் தாக்குதலின் முழு பின்னணி வெளிச்சத்துக்கு வரும் என்று பெல்ஜியம் போலீசார் கூறியுள்ளனர்.