தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்ற தேர்தல் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் சூழலில், தற்போது சமூக வலைதளங்களில் உலவும் சில கருத்துக்கணிப்பு முடிவுகள் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. குறிப்பாக, திராவிட கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களின் வாக்கு வங்கியும் தலா 10% என்ற அளவிற்கு சரிந்துள்ளதாகவும், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 50% வாக்குகளை பெற்று ஆட்சியை பிடிக்கப் போவதாகவும் பகிரப்படும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகள் ஒட்டுமொத்தமாக விஜய்யின் பக்கம் சாய்ந்துள்ளதாக கூறப்படும் இந்த தரவுகள், தற்போதைய கள யதார்த்தத்தோடு பொருந்துகிறதா என்பதை ஆய்வு செய்வது அவசியமாகிறது.
பொதுவாக, தேர்தல் கருத்துக்கணிப்புகள் என்பது மக்களின் மனநிலையை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பிரதிபலிக்கும் கண்ணாடியே தவிர, அதுவே இறுதி தீர்ப்பல்ல. அரசியல் பாரம்பரியம் கொண்ட திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளின் 10% வாக்குகள் வெளியேறுவது என்பது அரசியல் ரீதியான ஆச்சரியமாகவே பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு கட்சிக்கும் அடிமட்ட அளவில் ஒரு நிரந்தர வாக்கு வங்கி இருந்தாலும் விஜய் என்ற பிம்பத்துடன் ஒரு புதிய கட்சியின் வருகையால் அந்த வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவு பெருமளவில் இருப்பதை மறுப்பதற்கில்லை. அதேபோல் விசிக, பாமக, மதிமுக, தேமுதிக போன்ற கட்சிகளின் பெரும்பான்மை வாக்குகள் விஜய்க்கு செல்லும் என்ற வாதமும் பல அரசியல் விமர்சகர்களால் ஏற்று கொள்ளப்படுகிறது. கம்யூனிஸ்ட் தவிர மற்ற கட்சிகளின் வாக்குகள் சென்ற தேர்தலில் கிடைத்த அளவுக்கு கிடைக்காது என்றே ஊகிக்கப்படுகிறது.
மொத்தத்தில் விஜய் ஆட்சி அமைப்பாரா என்ற கேள்விக்கு விடை மக்களின் கைகளில்தான் உள்ளது. தமிழக மக்கள் எப்போதும் ஒரு மாற்றத்தை விரும்பினாலும், அது ஸ்திரமான கொள்கை மற்றும் வலுவான கட்டமைப்பின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். விஜய் தனது கட்சி பணிகளை 234 தொகுதிகளிலும் தீவிரப்படுத்தி, மக்களை நேரடியாக சந்தித்து ஆதரவு கோரும்போது இந்த கருத்துக்கணிப்பு உண்மையாக வாய்ப்பு உள்ளது. 2026 தேர்தல் களம் என்பது வெறும் இருமுனை போட்டியாக இல்லாமல், மும்முனை போட்டியாக மாறியதே ஜனநாயகத்தின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
