பாகிஸ்தானின் ஆதரவுடன் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய இரண்டு பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் இரகசியமாக சந்தித்துப் பேசியதற்கான புகைப்படங்களை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 உயிர்களை பலிகொண்ட தாக்குதலுக்கும், நவம்பரில் டெல்லியில் 15 பேர் கொல்லப்பட்ட கார் குண்டுவெடிப்புக்கும் காரணமான இந்த இரு அமைப்புகளின் தலைவர்கள், பாகிஸ்தானின் பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமதுவின் தலைமையகத்தில் சந்தித்துள்ளனர். இந்த தலைமையகம், பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய படைகள் பதிலடி கொடுத்தபோது நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் குண்டு வீசித் தாக்கப்பட்ட தளங்களில் ஒன்றாகும்.
இதுகுறித்து வெளியான புகைப்படங்களில், லஷ்கர்-இ-தொய்பாவின் துணை தலைவர் சைபுல்லா கசூரி, ஜெய்ஷ் அமைப்பின் தளபதிகளுடன் பேசி கொண்டிருப்பது தெளிவாக தெரிகிறது. பாகிஸ்தான் அரசின் ஆதரவுடன் செயல்படும் இந்த இரண்டு பயங்கரவாத அமைப்புகளும் இணைந்து சதி திட்டங்களை தீட்டுகின்றன என்ற உளவுத்துறையின் எச்சரிக்கையை இந்த சந்திப்பு உறுதிப்படுத்துகிறது.
மேலும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியப் படைகள் குறிவைத்த பயங்கரவாதத் தளங்களில் ஒன்றான, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) உள்ள ராவலாகோட்டில், பயங்கரவாத ஊடுருவல் மையங்கள் (Launch Pads) மீண்டும் கட்டப்பட்டு வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் NDTV-யிடம் தெரிவித்துள்ளன.
டெல்லியின் செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு அடுத்த தாக்குதலுக்கு தயாராகி வருவதாகவும், புதிய தற்கொலை படைகளை உருவாக்க நிதி திரட்டி வருவதாகவும் கடந்த மாதம் செய்தி வெளியானது. செங்கோட்டையில் நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பு குறித்த விசாரணையில் கிடைத்த தடயங்களின்படி, ஜெய்ஷ் அமைப்பு சதாபே என்ற பாகிஸ்தானிய செயலி உட்பட டிஜிட்டல் வழிகளில் நிதி திரட்டி வருகிறது என்று உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியாவை தாக்கும் தற்கொலை தாக்குதலுக்காக ஜெய்ஷ்-இ-முகமது நன்கொடை கோருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புகள், பாகிஸ்தான் அரசு ஆதரவுடன், ஜம்மு-காஷ்மீரை குறிவைத்து ஒரு புதிய ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்த தயாராகி வருவதாக சில அறிக்கைகள் தெரிவித்தன. செப்டம்பர் மாதம் முதல் பயங்கரவாத அமைப்புகள் ஊடுருவல், உளவு பார்த்தல் மற்றும் எல்லை தாண்டிய தளவாடங்களை அதிகரித்துள்ளன என்றும், பாகிஸ்தானின் சிறப்பு சேவைகள் குழு மற்றும் ஐ.எஸ்.ஐ உதவியுடன் பல லஷ்கர் மற்றும் ஜெய்ஷ் பிரிவுகள் காஷ்மீருக்குள் நுழைந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகின்றன.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்கு ஆறு மாதங்களுக்கு பிறகும், இந்த இரண்டு பயங்கரவாத அமைப்புகளும் ஜம்மு-காஷ்மீரை குறிவைத்து புதிய தாக்குதல் திட்டங்களை தீட்டி வருகின்றன. ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு, இந்த அமைப்புகள் தங்கள் தளங்களை கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் லோயர் தீர் பகுதியில் இடமாற்றம் செய்துள்ளன. லஷ்கர் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஆமிர் ஜியா, ‘மர்கஸ் ஜிஹாத்-இ-அக்ஸா’ என்ற ஒரு பயங்கரவாத தளத்தை ஒரு மசூதி என்று கூற முயன்றதற்கான புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகைப்படங்கள் மற்றும் உளவுத்துறை தகவல்கள், பாகிஸ்தான் உளவுத்துறை உதவியுடன் செயல்படும் இந்த கொடிய பயங்கரவாத அமைப்புகளின் சந்திப்புகள், இந்தியாவை குறிவைத்து தங்கள் செயல்பாடுகளை தொடர்ந்து அதிகரிப்பதையும், அடுத்தகட்ட பெரிய தாக்குதல்களுக்கு திட்டமிடுவதையும் தெளிவாக உணர்த்துகின்றன. இது, இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு தொடர்ந்து பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதையும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
