மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், குவைத்தில் மூன்று அமெரிக்க F-15 ரக போர் விமானங்கள் விழுந்து நொறுங்கியது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் இது ஈரானின் தாக்குதலாக இருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், தற்போது அமெரிக்க ராணுவம் ஒரு திடுக்கிடும் உண்மையை வெளியிட்டுள்ளது. ஈரானிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை எதிர்கொள்ளும் தீவிரமான போர்க்கள சூழலில், குவைத் நாட்டு வான் பாதுகாப்பு படையினர் தவறுதலாக அமெரிக்காவின் மூன்று F-15 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளனர். இதனை ‘பிரண்ட்லி ஃபயர்’ என்று ராணுவ ரீதியாக அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.
மார்ச் 1 இரவு 11:03 மணியளவில், அமெரிக்காவின் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ நடவடிக்கைக்கு ஆதரவாக பறந்து கொண்டிருந்த இந்த மூன்று F-15E ஸ்ட்ரைக் ஈகிள் விமானங்கள், குவைத் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டன. அந்த சமயத்தில் ஈரானிய போர் விமானங்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் தற்கொலை ட்ரோன்கள் ஆகியவற்றின் தாக்குதல்கள் தீவிரமாக இருந்ததால், பதற்றத்தில் இருந்த குவைத் படைகள் அமெரிக்க விமானங்களை எதிரி நாட்டு விமானங்கள் என்று தவறாக கருதித் தாக்கியுள்ளன. இந்த விபத்தில் சிக்கிய ஆறு விமான பணியாளர்களும் அதிர்ஷ்டவசமாக தப்பித்து, தற்போது பாதுகாப்பாக உள்ளதாக அமெரிக்ககா தெரிவித்துள்ளது.
குவைத் பாதுகாப்பு அமைச்சகமும் இந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டுள்ளது. பல அமெரிக்க போர் விமானங்கள் விழுந்ததை உறுதிப்படுத்திய குவைத், உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு பணிகளைத் தொடங்கி விமானிகளை மீட்டது. காயமடைந்த விமானிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது சீரான நிலையில் உள்ளனர். ஒருபுறம் ஈரான் வளைகுடா நாடுகளில் மூன்றாவது நாளாக தனது ஏவுகணை தாக்குதல்களைத் தொடர்ந்து வரும் நிலையில், நட்பு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இந்த தகவல் தொடர்பு இடைவெளி மற்றும் தவறான தாக்குதல், போர் களத்தின் குழப்பமான நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
F-15 ஈகிள் போர் விமானங்கள் 1976-இல் அறிமுகப்படுத்தப்பட்டவை. 2026-ஆம் ஆண்டு வரையிலான தரவுகளின்படி, வான்வழிப் போர்களில் தோல்வியே இல்லாத சாதனையை படைத்திருந்தன. இருப்பினும், தற்போது நடந்த விபத்து எதிரிகளால் அல்லாமல் நட்பு நாடுகளாலேயே நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஈரானுக்கு எதிரான ‘எபிக் பியூரி’ நடவடிக்கையில் பி-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள், தேட் மற்றும் பேட்ரியாட் ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள், எஃப்-22 மற்றும் எஃப்-35 போர் விமானங்கள் எனப் பல நவீன ஆயுதங்களை அமெரிக்கா களமிறக்கியுள்ளது.
இருப்பினும், இந்த விபத்தை ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்று குறிப்பிட்டுள்ள அமெரிக்கா, மீட்பு பணிகளில் குவைத் காட்டிய அக்கறைக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளது. ஈரானுடனான இந்த போர் ஒரு விரிவான பிராந்திய மோதலாக மாறிவரும் வேளையில், வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையே முறையான ஒருங்கிணைப்பு இல்லாதது எதிர்காலத்தில் மேலும் பல உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்கா தனது தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், ஈரானும் பின்வாங்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
