மத்திய கிழக்கில் போர் நான்காவது நாளை எட்டியுள்ள நிலையில், ஈரானின் மேற்கு பகுதியில் வாழும் குர்திஷ் இன மக்கள் அமெரிக்காவின் ரகசிய ஆயுத உதவியுடன் இன்னும் ஒரு சில நாட்களில் மிகப்பெரிய உள்நாட்டு புரட்சியை தொடங்கவுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் தற்போதைய இஸ்லாமிய ஆட்சியை தூக்கியெறிந்துவிட்டு, மக்கள் தங்கள் நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் விடுத்த அழைப்பை தொடர்ந்து இந்த நகர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டாகவே குர்திஷ் தன்னார்வலர்களுக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பிலிருந்து ஆயுதங்கள் கடத்தப்பட்டு வருவதாகவும், தற்போது ஈரானின் பாதுகாப்பு நிலைகளை சிதைக்கும் நோக்கில் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்படுவதால், தரைவழி புரட்சிக்கு இதுவே சரியான தருணம் என்று அவர்கள் கருதுகின்றனர்.
ஈரானின் அடுத்த உச்ச தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக தெஹ்ரானில் மூத்த மத குருமார்கள் கூடி விவாதித்த கட்டிடத்தை அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய போர் விமானங்கள் ஏவுகணைகளால் தாக்கி தரைமட்டமாக்கியுள்ளன. சனிக்கிழமையன்று அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு பின் ஒரு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் ஈரானின் முயற்சியை முறியடிக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள டொனால்ட் டிரம்ப், “ஈரானின் வான் பாதுகாப்பு, விமானப்படை, கடற்படை மற்றும் தலைமைத்துவம் அனைத்தும் சிதைந்துவிட்டன; அவர்கள் இப்போது சமாதானம் பேச விரும்புகிறார்கள், ஆனால் அதற்கு காலம் கடந்துவிட்டது” என்று மிக கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் தனது ட்ரோன்கள் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கத்தாரில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க ராணுவ தளத்தை குறிவைத்துத் தாக்குதல்களை தொடுத்துள்ளது. சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் ஏற்கனவே ஈரானிய ட்ரோன்களால் தாக்கப்பட்ட நிலையில், அங்கு மீண்டும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் வசிக்கும் அமெரிக்க குடிமக்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். சர்வதேச எரிசக்தி விநியோக மையங்கள் மீதான இந்த தொடர் தாக்குதல்கள் உலகளாவிய பொருளாதாரத்தைப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளன.
மறுபுறம், இஸ்ரேல் தனது ராணுவத்தை லெபனான் எல்லைக்குள் அனுப்பி தரைவழி தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினரை எல்லையிலிருந்து விரட்டியடிக்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா முகாம்களை சிதைப்பதன் மூலம் இஸ்ரேலிய நகரங்கள் மீதான ட்ரோன் தாக்குதல்களை குறைக்க முடியும் என்று அந்நாட்டு ராணுவம் நம்புகிறது. இதனால் போர் தற்போது ஈரான் மற்றும் இஸ்ரேல் எல்லைகளை தாண்டி, அண்டை நாடுகளான லெபனான், சவூதி மற்றும் அமீரகம் என ஒட்டுமொத்த வளைகுடா பிராந்தியத்தையும் ஒரு சுழலில் சிக்க வைத்துள்ளது.
ஈரானுக்குள் குர்திஷ் மக்களின் கிளர்ச்சி தொடங்கினால், அது அந்நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பை முற்றிலுமாக நிலைகுலையச் செய்யும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வெளியிலிருந்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்களும், உள்ளிருந்து குர்திஷ் கிளர்ச்சியாளர்களின் தரைவழி தாக்குதல்களும் ஈரானிய அரசை ஒரு இக்கட்டான சூழலுக்கு தள்ளியுள்ளன. பேச்சுவார்த்தைக்கு இனி இடமில்லை என்ற டிரம்பின் பிடிவாதம், இந்தப் போரை ஒரு நீண்ட கால மோதலாக மாற்றக்கூடும். இந்த அதிகார போட்டியில் இறுதியில் ஈரான் மக்கள் எத்தகைய முடிவை எடுப்பார்கள் என்பதும், மத்திய கிழக்கின் வரைபடம் மாறுமா என்பதும் அடுத்த சில நாட்களில் தெரியவரும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
