ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், ஆயிரக்கணக்கான குர்திஷ் போராளிகள் அந்த நாட்டின் மீது தரைவழி தாக்குதலை தொடங்கியுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று இரவு இந்த தாக்குதல் தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்காவால் ரகசியமாக ஆயுதங்கள் வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான வீரர்கள் ஈரானுக்குள் ஊடுருவி ராணுவ நிலைகளை கைப்பற்றி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. ஈரானின் மேற்குப் பகுதியில் உள்ள மரிவான் மலைப்பகுதிகளில் இந்த வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை முதலே இதற்கான ஆயத்த பணிகள் தொடங்கிய நிலையில், மார்ச் 2 நள்ளிரவு முதல் அதிகாரப்பூர்வமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த தரைவழித் தாக்குதலுக்கு பின்னால் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் மிகப்பெரிய வியூகம் இருப்பதாக கருதப்படுகிறது. ஈரானில் ஒரு ஆயுதமேந்திய கிளர்ச்சியை தூண்டும் நோக்கில், கடந்த ஓராண்டாகவே குர்திஷ் தன்னார்வலர்களுக்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் ஆயுதங்களை கடத்தி வந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, புதன்கிழமை அன்று ஈராக்கின் நஜாஃப் பாலைவன பகுதியில் நான்கு முதல் ஏழு அமெரிக்க-இஸ்ரேலிய ஹெலிகாப்டர்கள் மூலம் ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வான்வழியாக விநியோகம் செய்யப்பட்டுள்ளன. ஈரானின் பாதுகாப்பு திறனை குறைக்கும் வகையில் அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஏற்கனவே வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில், இப்போது தரைவழி புரட்சி தீவிரமடைந்துள்ளது.
ஈராக்கின் வடக்குப்பகுதியில் தளம் கொண்டுள்ள ஈரானிய குர்திஷ் அதிருப்தி குழுக்கள், சுலைமானியா மாகாணத்தில் உள்ள ஈரானிய எல்லை பகுதியில் தங்கள் படைகளை தயார் நிலையில் நிறுத்தியுள்ளன. குர்திஸ்தான் சுதந்திர கட்சியின் அதிகாரி கலீல் நதிரி இது குறித்து கூறுகையில், சாத்தியமான ராணுவ நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் தங்களை தொடர்பு கொண்டதாக தெரிவித்துள்ளார். ஈராக், சிரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் பரவியுள்ள குர்திஷ் படைகள், ஈரானின் தற்போதைய பலவீனத்தை பயன்படுத்தித் தங்களின் நீண்டகால தன்னாட்சி கனவை நனவாக்க முயன்று வருகின்றனர்.
மறுபுறம், ஈரானின் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லா அமைப்பு, லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதற்கு பழிவாங்க துடிக்கும் ஹெஸ்புல்லா, ‘எவ்வளவு தியாகங்கள் செய்தாலும் சரணடைய மாட்டோம்’ என்று சூளுரைத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை முதல் இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஹெஸ்புல்லா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், லெபனான் அதிபர் ஜோசப் அவுன் அந்த அமைப்பின் ராணுவ நடவடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளார். இது லெபனானின் இறையாண்மை சார்ந்த முடிவு என்று அவர் அறிவித்தாலும், ஹெஸ்புல்லா தலைவர் நயீம் காசிம் போரைத் தொடரப்போவதாக அறிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் மேலும் அதிகரித்துள்ள நிலையில், ஈரானில் இருந்து அமெரிக்க ராணுவ தளம் ஒன்றை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையை நேட்டோ படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன. காமேனியின் மறைவிற்கு பிறகு ஈரான் ஆவேசமாக பதிலடி கொடுத்து வரும் சூழலில், ஈரானின் மேற்கு எல்லை பகுதியில் குர்திஷ் போராளிகளின் ஊடுருவல் ஈரானிய ராணுவத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் உள்நாட்டு புரட்சி மற்றும் வெளிநாட்டு தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஈரான் தள்ளப்பட்டுள்ளது.
மொத்தத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்த ‘நிழல் போர்’ இப்போது ஒரு நேரடி தரைவழி போராக உருவெடுத்துள்ளது. ஈரானின் ஆட்சி அதிகாரத்தை கவிழ்க்க குர்திஷ் போராளிகளை ஒரு கருவியாக அமெரிக்கா பயன்படுத்துவது சர்வதேச அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போர் ஈரானின் வரைபடத்தை மாற்றுமா அல்லது ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் ஒரு மிகப்பெரிய சாம்பல் மேடாக மாற்றுமா என்பது வரும் நாட்களின் ராணுவ நகர்வுகளை பொறுத்தே அமையும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
