நடிகர் விஜய் “தமிழக வெற்றி கழகம்” என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நிலையில், இந்தக் கட்சிக்கு பெரிய அளவில் கோலிவுட் திரையுலகினர் ஆதரவு கொடுக்கவில்லை என்பதை பார்த்து வருகிறோம். தாடி பாலாஜி, செளந்திரராஜா போன்ற சில நடிகர்கள் மட்டுமே விஜய் கட்சிக்கு ஆதரவு கொடுத்துள்ளனர் என்பதும், மற்றபடி விஜய் படத்தை முதல் நாள் முதல் காட்சி ரசிக்கும் ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகினர் அரசியலுக்கு வந்தபோது அவருக்கு ஆதரவு கொடுக்க முன்வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தான், ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகை தேர்தல் நெருங்கும்போது விஜய்க்கு எதிராக திருப்ப, ஆளுங்கட்சித் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. சூர்யா உட்பட சில நடிகர்கள், வெற்றிமாறன் உள்ளிட்ட சில இயக்குனர்கள், தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும், விஜய்க்கு எதிராகவும் பிரச்சாரம் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
தான் சார்ந்த திரையுலகமே தனக்கு எதிராக திருப்பப்படும் என்பதை அறிந்த விஜய், அதைப் பற்றி கவலைப்படாமல் “நமக்கு தேவை பொதுமக்களின் ஓட்டுதான்” என்று தனது பாதையில் சென்று கொண்டிருப்பதாக தெரிகிறது.
உலகநாயகன் கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பித்த போதும், ரஜினி உட்பட எந்த ஒரு திரையுலகினரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை என்றும், அதேபோல்தான் இப்போது விஜய்க்கும் நேர்ந்து வருகிறது என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.