கேரள மாநிலத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள் என்பதோடு, இந்த கோவில் பணக்கார கோவில்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், 2017ஆம் ஆண்டிலிருந்து 2024ஆம் ஆண்டு வரை பெறப்பட்ட வருமானத்தின் அடிப்படையில் 1.57 கோடி வரி செலுத்தப்படவில்லை என்றும், அதனால் உடனடியாக அந்த வரியை செலுத்த வேண்டும் என்றும் வருமான வரித்துறை பத்மநாபசுவாமி கோவிலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், வரி செலுத்தாததற்கான காரணத்தை கோவில் நிர்வாகம் விளக்க வேண்டும் என்றும், செலுத்தப்படாத வரிக்கு வட்டி மற்றும் அபராத தொகையையும் வசூலிக்கப்படும் என்றும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிலுக்கு கிடைக்கும் வாடகை வருமானம், கடவுள் படங்களின் விற்பனை, யானைகளுக்கான கட்டணம் ஆகியவற்றிலும் கோயில் நிர்வாகம் வரி செலுத்தவில்லை என்பதை ஜிஎஸ்டி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், அதே நேரத்தில் பத்மநாபசுவாமி கோவில் நிர்வாகிகள் இதுகுறித்து கூறும்போது, கோவிலில் வழங்கப்படும் சேவைகள் வணிக நடவடிக்கைகள் அல்ல என்பதால் வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும், கோவிலுக்கு ஜிஎஸ்டி வரிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர். மேலும், வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ்க்கு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.