கர்நாடக மாநிலத்தில் அருவியில் சிக்கிய இளம்பெண்ணை 12 மணிநேர போராட்டத்திற்குப் பிறகு மீட்டுள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் சப்தமில்லாமல் திரைக்கு வந்து தென்னிந்திய சினிமாவையை கலக்கியது மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம். மலையாளத்தில் வெளியான இத்திரைப்படம் பல கோடிகளை வசூலித்து பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. கொடைக்கானல் குணா குகையில் சிக்கிய நண்பரை சக நண்பர்கள் மீட்பது தான் கதையே.
இதேபோல் கர்நாடகத்தில் நேற்று ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மைடாலா நீர் வீழ்ச்சியானது புகழ் பெற்று விளங்குகிறது. இங்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவர். அந்த வகையில் கர்நாடகாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அருவியின் பாறை இடுக்கு அருகில் நின்று புகைப்படம் எடுத்திருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழவே பாறை இடுக்குகளில் மாட்டிக் கொண்டார். மஞ்சும்மல் பாய்ஸ் படம் போன்று நடந்த இச்சம்பவத்தினை நேரில் கண்டவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவரால் மேலே வர இயலவில்லை. இதனால் இரவு முழுக்க அருவியின் பாறை இடுக்குகளிலேயே இருந்துள்ளார். இதனால் அவர் மிகவும் சோர்வடைந்தார். தொடர்ந்து தண்ணீர் வரத்து சற்றுக் குறைய மீட்புப் பணியைத் துரிதப்படுத்தி தீயணைப்புத் துறையினர் இன்று பிற்பகலில் அவரை பத்திரமாக மீட்டுள்ளனர். ஆபத்தான முறையில் புகைப்படம் எடுக்க முயன்று 12 மணிநேரத்திற்கும் மேலாக பாறை இடுக்குகளில் மாட்டிக் கொண்டு உயிர்பிழைத்திருக்கிறார் அந்த இளம்பெண்.