தமிழக அரசியல் வரலாற்றில் புதிய கட்சிகள் தோன்றுவதும், அவை காலப்போக்கில் பெரிய திராவிட கட்சிகளுடன் ஐக்கியமாவதும் ஒரு தொடர்கதையாகவே இருந்து வருகிறது. ஆரம்பத்தில் தனித்தன்மை மற்றும் கொள்கை முழக்கங்களுடன் களம் காணும் பல தலைவர்கள், ஒரு சில தேர்தல்களுக்கு பிறகு தங்களின் வாக்கு வங்கி சிதறுவதை தவிர்க்கவோ அல்லது அதிகாரத்தில் பங்கெடுக்கவோ திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து விடுவதை பார்த்திருக்கிறோம். கேப்டன் விஜயகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் போன்றோர் தனிப்பாதையில் பயணிக்க முயன்றாலும், இறுதியில் தேர்தல் களம் அவர்களை ஏதோ ஒரு திராவிட கூட்டணியின் பக்கமே சாய்த்தது. ஆனால், நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’ இந்த பழைய வரலாற்றை மாற்றியெழுதப்போகும் ஒரு சக்தியாக பார்க்கப்படுகிறது.
விஜய்யின் அரசியல் வருகை என்பது வெறும் திரை நட்சத்திரத்தின் ஆசை அல்ல, அது பல ஆண்டுகால திட்டமிடல் மற்றும் அமைதியான களப்பணியின் விளைவு. மற்ற நடிகர்களை போல அவசரப்பட்டு தேர்தல் நேரத்தில் மட்டும் வராமல், தனது ரசிகர் மன்றத்தை வலுவான மக்கள் இயக்கமாக மாற்றி, இப்போது அதனை ஒரு முழுமையான அரசியல் கட்சியாக கட்டமைத்துள்ளார். 2026 தேர்தலை பொறுத்தவரை, விஜய் எந்தவொரு திராவிட கட்சியுடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. அவர் எடுக்கப்போகும் இந்த ‘தனி வழி’ என்பது தமிழக அரசியலில் இத்தனை காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த கூட்டணி கலாச்சாரத்திற்கு ஒரு மிகப்பெரிய சவாலாக அமையப்போகிறது.
தமிழகத்தை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் இரண்டு திராவிட கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் ‘ஆப்பு’ வைக்கும் வேலையை விஜய் கச்சிதமாக செய்து வருகிறார். ஒரு பக்கம் ஆளும் கட்சியின் குறைகளை சுட்டிக்காட்டுவதும், மறுபக்கம் எதிர்க்கட்சியின் இடத்தை நிரப்ப முயல்வதும் விஜய்யின் வியூகமாக உள்ளது. இத்தனை வருஷமா மாத்தி மாத்தி நீங்க ஆடுன ஆட்டத்துக்கு எண்ட் கார்டு போட வந்தாச்சு” என்ற தொனியில் அவரது ஒவ்வொரு நடவடிக்கையும் அமைந்துள்ளது. இது ஏதோ ஒரு பக்கத்திற்கு வைக்கப்படும் ‘செக்’ மட்டுமல்ல, திராவிட அரசியலின் கட்டமைப்பையே அசைத்து பார்க்கும் ஒரு முயற்சி என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
விஜய்யின் பலம் என்பது அவர் கொண்டுள்ள அசாத்தியமான இளைஞர் பட்டாளம் மற்றும் ஆளும் வர்க்கத்தின் மீதான அதிருப்தியில் உள்ள பொது மக்கள். புதிதாக அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் முதல் தேர்தலில் மட்டும் வீராப்பாக பேசிவிட்டு, பிறகு திராவிட கட்சிகளுடன் சமரசம் செய்து கொள்வதை பார்த்து சலிப்படைந்த வாக்காளர்களுக்கு, விஜய்யின் சமரசமற்ற போக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. அவர் எடுக்கும் முடிவுகள் மற்றவர்களைப் போல இல்லாமல், மிகவும் நிதானமாகவும் அதே சமயம் அதிரடியாகவும் இருக்கின்றன. இந்த தனித்துவமான அணுகுமுறைதான் அவரை ஒரு ‘மாற்று அரசியல்’ சக்தியாக முன்னிறுத்துகிறது.
கடந்த காலங்களில் விஜயகாந்த் அல்லது கமல் போன்றோர் சந்தித்த தேர்தல் சவால்களை விட, விஜய்க்கு இருக்கும் சூழல் மிகவும் சாதகமாக உள்ளது. சமூக வலைதளங்களின் தாக்கம் மற்றும் இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள அரசியல் விழிப்புணர்வு விஜய்க்கு பெரும் பக்கபலமாக இருக்கின்றன. ஒரு தனி மனிதராக நின்று இரண்டு பெரும் அரசியல் யானைகளை எதிர்ப்பது என்பது சாதாரண காரியம் அல்ல; ஆனால், விஜய் அதனை தனது மௌனத்தாலும், சரியான நேரத்தில் எடுக்கும் துணிச்சலான முடிவுகளாலும் சாத்தியமாக்கி வருகிறார். “கூட்டணி இல்லை, நேரடி போட்டிதான்” என்ற அவரது நிலைப்பாடு தமிழக அரசியலில் ஒரு புதிய அதிர்வை உண்டாக்கியுள்ளது.
முடிவாக, 2026 சட்டமன்ற தேர்தல் என்பது தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய சுத்திகரிப்பு காலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றவர்கள் தடம் மாறியது போல விஜய் மாறமாட்டார் என்பதும், அவர் திராவிட கட்சிகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே வந்துள்ளார் என்பதும் அவரது ஆதரவாளர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. தமிழக அரசியலில் இனி ‘விஜய் ஃபேக்டர்’ இல்லாமல் எதுவும் நடக்காது என்ற சூழல் உருவாகியுள்ளது. காலம் காலமாக தொடரும் இருமுனை போட்டியை உடைத்து, ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தை படைக்கப்போகும் அந்த ‘ஆட்டநாயகன்’ விஜய்யாகவே இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
