சமீபத்தில் ஹாட்ஸ்டார் உடன் ஜியோ இணைந்ததை அடுத்து, “ஜியோ ஹாட்ஸ்டார்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதன் பின்னர், அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ இணைப்பிற்கு பிந்தைய முதல் நடவடிக்கையாக 1,100 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, இது குறித்த செய்திகள் கசிந்ததால், பலர் முன்னதாகவே வேலையை விட்டு, வேறு நல்ல வேலை தேடிக் கொண்டதாகவும், வேலை நீக்க நடவடிக்கைகள் வெளிப்படையாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த பணி நீக்க நடவடிக்கை பெரும்பாலும் நிதி, வணிக, விநியோகம் மற்றும் சட்ட துறையைச் சேர்ந்தவர்களையே பாதிக்கும் என கூறப்படுகிறது. அதேபோல், மூத்த இயக்குநர்கள், மேலாளர்கள் மற்றும் ஆரம்ப நிலை ஊழியர்கள் சிலர் பணி நீக்கம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், சாம்பியன்ஷிப், மகளிர் ஐபிஎல், ஐபிஎல் உள்ளிட்ட போட்டிகளில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்றும், மேலும் விளையாட்டுத் தொடர்பாக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய சேனல் ஒன்றை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த இணைப்பின் மூலம் 1,100 ஊழியர்கள் வேலையை இழக்க நேரிடும் என்பதற்கான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில், முன்னணி நிறுவனங்கள் தொடர்ந்து வேலை நீக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது மேலும் கவலையை ஏற்படுத்துகிறது.