தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திரைப்படத்தை முடக்குவதன் மூலம் ஒரு தலைவரின் வளர்ச்சியை தடுத்துவிடலாம் என்று நினைப்பது, வரலாற்றை தவறாக புரிந்துகொள்வதையே காட்டுகிறது. தற்போது விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு எதிராக மத்திய அரசு மற்றும் தணிக்கை வாரியம் மூலம் கொடுக்கப்படும் நெருக்கடிகள், பல ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்திற்கு ஏற்பட்ட முட்டுக்கட்டைகளை நினைவுபடுத்துகின்றன.
அன்று ஆளுங்கட்சியாக இருந்த திமுக, எம்.ஜி.ஆரின் செல்வாக்கை குறைக்க அந்த படத்திற்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தியது. ஆனால், அந்த தடைகளையே தனக்கு சாதகமாக மாற்றிய எம்.ஜி.ஆர், மக்களின் பேராதரவுடன் ஆட்சி கட்டிலில் அமர்ந்தார். அதே தவறைத்தான் இப்போது பாஜக தலைமை ‘ஜனநாயகன்’ விஷயத்தில் மீண்டும் செய்கிறது.
ஒரு திரைப்படத்தை முடக்கிவிட்டால் அல்லது திரையரங்குகளுக்கு நெருக்கடி கொடுத்தால் விஜய் பயந்துபோய் தங்கள் கூட்டணிக்கு வந்துவிடுவார் என்று யாராவது கணக்கு போட்டால், அது அவர்களின் அரசியல் அறியாமையையே வெளிப்படுத்துகிறது. விஜய் போன்ற ஒரு மக்கள் செல்வாக்கு மிக்க நாயகனை மிரட்ட நினைப்பது, எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவதற்கு சமமானது.
இத்தகைய அடக்குமுறைகள் விஜய்யை ஒரு சாதாரண நடிகராக பார்க்காமல், அநீதிக்கு எதிராக போராடும் ஒரு தலைவராக மக்கள் மத்தியில் நிலைநிறுத்துகின்றன. அதிகாரம் கொண்ட ஒரு தரப்பு தன்னை நசுக்க நினைக்கிறது என்ற செய்தி பரவும்போது, அது விஜய்க்கு ஒரு மிகப்பெரிய ‘அனுதாப அலையை’ உருவாக்கி தருகிறது.
ஒரு மாபெரும் அரசியல் புரட்சியை ஒரே ஒரு திரைப்படத்தை தடுப்பதன் மூலம் நிறுத்திவிட முடியாது என்பதை எதிர்தரப்பினர் உணர மறுக்கிறார்கள். மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பி ஒரு தலைவரின் பின்னால் அணிவகுக்க தொடங்கிவிட்டால், இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான தடைகள் அந்த வேகத்தை பன்மடங்கு அதிகரிக்கவே செய்யும். ‘ஜனநாயகன்’ படத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் தங்களுக்கு எதிராக இருக்குமோ என்ற அச்சமே இத்தகைய முட்டுக்கட்டைகளுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. ஆனால், படத்தை முடக்க முடக்க, அதை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடம் பலமடங்கு பெருகுகிறது என்பதுதான் எதார்த்தம்.
தமிழக மக்கள் எப்போதும் அதிகார பலத்தை பயன்படுத்தி ஒருவரை ஒடுக்க நினைப்பவர்களை ஆதரித்ததில்லை. தணிக்கை வாரியத்தின் கெடுபிடிகளும், மத்திய அமைப்புகளின் மறைமுக மிரட்டல்களும் விஜய்யின் உறுதிப்பாட்டை சோதிக்கலாம், ஆனால் அவரது தொண்டர்களின் பலத்தை சிதைக்க முடியாது. ஒரு கலைஞனை அவனது படைப்பின் மூலம் முடக்க நினைப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது மட்டுமல்ல, அது அந்த தலைவனை இன்னும் வலிமையான ஒரு மாற்று சக்தியாக உருவெடுக்க செய்யும். இதைத்தான் கடந்த கால தமிழக அரசியல் நமக்கு கற்றுக்கொடுத்த பாடமாக இருக்கிறது.
விஜய் ஏற்கனவே அறிவித்தது போல, தான் ஒரு கொள்கை தலைவனாக அரசியலுக்கு வந்துள்ளார். “படம் ரிலீஸ் ஆகாவிட்டாலும் கவலையில்லை” என்ற அவரது துணிச்சலான முடிவு, அவர் ஒருபோதும் அதிகாரத்திற்கு பணிய மாட்டார் என்பதை தெளிவாக காட்டுகிறது. பாஜக போன்ற ஒரு தேசிய கட்சி, ஒரு மாநில தலைவரின் திரைப்படத்தை பார்த்து அஞ்சுவது போலவே இந்த செயல்கள் சித்தரிக்கப்படுகின்றன. இத்தகைய சூழலில், விஜய் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அவரது அரசியல் முதிர்ச்சியையும், எதிர்ப்புகளை எதிர்கொள்ளும் தைரியத்தையும் மக்களுக்கு பறைசாற்றுகிறது.
இறுதியாக, ‘ஜனநாயகன்’ படத்திற்கு ஏற்படும் ஒவ்வொரு தடையும் விஜய்யின் அரசியல் வெற்றிக்கு இடப்படும் அஸ்திவாரமாகவே அமையும். மக்கள் எல்லா நிகழ்வுகளையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒரு திரை நாயகனை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள துணிவில்லாதவர்கள் தான், அவரது திரை பயணத்தை சிதைக்க முயல்கிறார்கள் என்ற கருத்து பொதுமக்களிடையே வலுத்து வருகிறது. 2026-ல் நடக்கப்போகும் பெரிய மாற்றத்தை இத்தகைய சிறு முட்டுக்கட்டைகளால் தடுத்துவிட முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
