பொதுவாக, முன்னணி ஐடி நிறுவனங்கள் புதிய கிளையை தொடங்க வேண்டும் என்றால், சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, கூர்கான், புனே உள்ளிட்ட நகரங்களை மட்டுமே தேர்வு செய்கின்றன. இந்த நகரங்கள் ஐடி துறைக்கு சிறப்பாக விளங்கி வரும் நிலையில், தற்போது இந்த பட்டியலில் கோவை சேர இருப்பதாக கூறப்படுகிறது.
ஐடி துறையில் பணிபுரியும் ஏராளமான ஊழியர்கள் கோவையிலிருந்து வருவதால், அவர்களுக்கு உள்ளூரிலேயே வேலை வாய்ப்பு அமைத்து கொடுக்க, பல நிறுவனங்கள் கோவையில் தங்களுடைய கிளை அலுவலகத்தை அமைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, இன்போசிஸ், இரண்டாம் தர நகரங்களில் தங்களுடைய அலுவலகத்தை விரிவாக்கம் செய்ய இருக்கும் நிலையில், அந்த நிறுவனம் தேர்ந்தெடுத்த ஒன்பது நகரங்களில் கோவையும் ஒன்றாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவையில் ஐடி பார்க் மற்றும் ஐடி துறை சம்பந்தப்பட்ட படிப்புகளை வழங்கும் கல்லூரிகள் உள்ளதால், உள்ளூரிலேயே திறமையான ஊழியர்கள் கிடைப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. எனவே சென்னை போலவே, கோவையும் ஒரு முக்கிய ஐடி நகரமாக மாற வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டின் “மான்செஸ்டர்” என்று அழைக்கப்படும் கோவை, ஜவுளி மற்றும் பஞ்சு ஆலைகளுக்கு பெயர் பெற்றுள்ளது. தற்போது, கோவை தன்னை ஒரு முக்கிய ஐடி நகரமாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறது.
கோவைக்கு வருவதற்கு ஒரு காலத்தில் தயங்கிய ஐடி நிறுவனங்கள், தற்போது திறமையான தொழிலாளர்கள் கோவையில் கிடைப்பதால், தங்களுடைய அலுவலகங்களை கோவையில் நிறுவ முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, கோவை மற்றும் அதை சுற்றியுள்ள நகரங்களில் உள்ள மாணவர்கள் இனி சென்னை போன்ற வெளியூர்களுக்கு செல்லாமல், உள்ளூரிலேயே தங்கள் திறமையை நிரூபிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.