இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO)வின் புதிய தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். தற்போது இஸ்ரோவின் தலைவராக உள்ள சோம்நாத் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் மத்திய அரசின் நியமனக் குழு ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணனை இக்குழு அறிவித்துள்ளது.
யார் இந்த நாராயணன்..?
தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரியைச் சேர்ந்தவர்தான் டாக்டர். வி. நாராயணன். எளிய குடும்பத்தில் பிறந்து அரசுப் பள்ளியில் தனது கல்வியைத் துவக்கி பின்னாளில் விண்வெளி ஆய்வில் ஈடுபாடு கொண்டு கடந்த 1984-ல் இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரோவில் பல்வேறு பிரிவுகளின் கீழ் திறம்படப் பணியாற்றியிருக்கிறார் டாக்டர். நாராயணன்.
பல்கலைக்கழகங்களில் இனி இவங்களும் துணைவேந்தராகலாம்.. யுஜிசி -யின் புதிய நெறிமுறையால் குழப்பம்
தற்போது கேரளாவில் திருவனந்தபுரம் வலியமாலாவில் செயல்பட்டு வரும் திரவ உந்துவியல் மையத்தின் இயக்குநராக கடந்த ஆறு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார் நாராயணன்.
ராக்கெட் தொழில்நுட்பம் மற்றும் விண்கலம் உள்ளிட்டவற்றில் நாராயணன் அதிக நிபுணத்துவம் கொண்டவர். இவரின் பணித்திறனைப் பாராட்டி இஸ்ரோ உயரிய பொறுப்பு வழங்கி கௌரவித்திருக்கிறது. விஞ்ஞானி நாராயணன் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., ஆதித்யா எல் 1 திட்டம், ஜி.எஸ்.எல்.வி., சந்திரயான் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் பணியாற்றியிருக்கிறார்.
இந்தத் திட்டங்களுக்கு திரவ உந்துவிசை கட்டுப்பாட்டு அமைப்பினை உருவாக்கும் குழுவின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். இப்படி இஸ்ரோவின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய பெருமைக்குரிய விஞ்ஞானி நாராயணன் வருகிற 14-ம் தேதி இஸ்ரோவின் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார். ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்டத்தினைச் சேர்ந்த விஞ்ஞானி சிவன் இஸ்ரோ தலைவராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.