மத்திய கிழக்கில் போர் பதற்றம் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீதான தாக்குதல்கள் இன்னும் வலுவடையும் என்றும், நரகத்தின் கதவுகள் திறக்கப்படும் என்றும் ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையின் செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனி அரசு தொலைக்காட்சியில் பேசுகையில், எதிரிகள் தொடர்ச்சியான தண்டனை தாக்குதல்களுக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு கணமும் இந்த தாக்குதல்களின் வீரியம் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்களால் தொடங்கிய இந்த போர், தற்போது ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் ஒரு மீள முடியாத அழிவுக்குள் தள்ளியுள்ளது. ஈரானிய ரெட் கிரசண்ட் அமைப்பின் தகவல்படி, இதுவரை நடத்தப்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட தாக்குதல்களில் 780-க்கும் அதிகமான ஈரானிய மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த மோதலின் ஒரு பகுதியாக, சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மூடப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. அந்த வழியாக செல்லும் ஒவ்வொரு கப்பலையும் எரிக்க போவதாகவும், இதன் விளைவாக கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 200 டாலராக உயரும் என்றும் ஈரானிய ராணுவ தளபதி பிரிகேடியர் ஜெனரல் ஜப்பாரி எச்சரித்துள்ளார். எண்ணெய் குழாய்களை தகர்த்து, இப்பகுதியிலிருந்து ஒரு சொட்டு எண்ணெய் கூட வெளியேற விடமாட்டோம் என ஈரான் சூளுரைத்துள்ளது. இந்த அச்சுறுத்தலால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதுடன், ஐரோப்பிய நாடுகளில் எரிவாயு விலையும் பங்குச்சந்தைகளும் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.
இதனிடையே இஸ்ரேலிய ராணுவம் தனது தாக்குதல்களை ஈரானின் தலைநகர் தெஹ்ரானுக்குள் கொண்டு சென்றுள்ளது. ஈரானிய அதிபர் அலுவலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கட்டிடங்கள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்களை நடத்தி அவற்றை சிதைத்துள்ளது. இது ஈரானிய பயங்கரவாத ஆட்சியின் இதயப்பகுதியில் நடத்தப்பட்ட துல்லியமான நடவடிக்கை என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை வர்ணித்துள்ளது. அதே சமயம், லெபனான் எல்லையில் ஹெஸ்புல்லா அமைப்பினரின் தாக்குதல்களை தடுக்க தற்காப்பு நடவடிக்கை என்ற பெயரில் இஸ்ரேலிய படைகள் லெபனானுக்குள் ஊடுருவியுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக லெபனான் ராணுவம் தனது எல்லை பகுதிகளில் இருந்து பின்வாங்கியுள்ளதால், அங்கு தரைவழிப் போர் மூளும் அபாயம் அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கில் உள்ள தங்களின் நலன்களை பாதுகாக்க பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் ராணுவ ரீதியான தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும் என்று அறிவித்துள்ளன. இதற்கு பதிலடியாக, ஐரோப்பிய நாடுகள் இந்த மோதலில் தலையிட்டால் அது ஈரானுக்கு எதிரான நேரடி போராக கருதப்படும் என்று ஈரான் வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது. எங்களின் ஏவுகணை ஏவுதளங்களை தாக்க முயலும் எந்தவொரு நாடும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணைபோவதாகவே கருதப்படும் என்றும், அதற்கான விளைவுகள் மிக கடுமையாக இருக்கும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. கத்தாரில் உள்ள ஹமத் சர்வதேச விமான நிலையத்தின் மீதான தாக்குதல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானின் நடான்ஸ் அணுசக்தி மையத்தின் நுழைவுப்பகுதியில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதை சர்வதேச அணுசக்தி முகமை உறுதிப்படுத்தியுள்ளது. செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் இந்த சேதங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் திறனை அடைய கூடாது என்பதில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் உறுதியாக உள்ளது. ஆனால், தனது அணுசக்தித் திட்டம் குறித்து அமெரிக்காவுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்த போவதில்லை என்பதில் ஈரான் பிடிவாதமாக உள்ளது. இந்த முரண்பாடு போரின் காலத்தை ஐந்து வாரங்களுக்கு மேல் நீட்டிக்கக்கூடும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜைரா எண்ணெய் மண்டலத்தில், இடைமறிக்கப்பட்ட ட்ரோன்களின் சிதறல்கள் விழுந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது மத்திய கிழக்கின் மிகப்பெரிய எண்ணெய் வர்த்தக மையமாக கருதப்படுவதால், அங்கு நிலவும் பாதுகாப்பற்ற சூழல் உலக நாடுகளை கவலையடைய செய்துள்ளது. கத்தாரில் திரவ இயற்கை எரிவாயு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால், ஐரோப்பாவில் எரிவாயு விலை ஒரே நாளில் 33 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. வல்லரசு நாடுகளின் இந்த நேரடி மோதல், வெறும் ராணுவ போராக மட்டுமல்லாமல் உலகளாவிய பொருளாதார பேரழிவாக உருவெடுத்து வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
