மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் தனது தாக்குதல் இலக்குகளை தற்போது அமெரிக்க சொத்துக்களில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்நாட்டு பொருளாதார மையங்களை நோக்கி திருப்பியுள்ளது. இதுவரை அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் தூதரகங்களை மட்டுமே குறிவைத்து வந்த ஈரான், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய மூன்று துறைமுகங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, துபாயின் ஜபெல் அலி துறைமுகம், அபுதாபியின் கலீஃபா துறைமுகம் மற்றும் புஜைரா துறைமுகம் ஆகியவை ஈரானின் இலக்குகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த துறைமுகங்களில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேறுமாறு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, ஈரானின் ட்ரோன் ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் புஜைரா எண்ணெய் கிடங்கு மீது பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலால் அங்குள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உலகளாவிய எரிபொருள் தேவையில் 2 சதவீதத்தை கையாளும் புஜைரா துறைமுகம் முடங்கியிருப்பது சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் இந்த துறைமுகம் தினசரி சராசரியாக 1.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதல் ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத்தின் முதுகெலும்பை சிதைக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
ஈரானின் இந்த அதிரடி மாற்றத்திற்கு நேற்று ஈரானின் கார்க் தீவு மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலே முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. ஈரானின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை தகர்க்க அமெரிக்கா ஐக்கிய அரபு அமீரகத்தின் துறைமுகங்களை பயன்படுத்தியதாக ஈரான் குற்றம் சாட்டுகிறது. அமெரிக்க படைகள் இந்தத் துறைமுகங்களை மறைவிடங்களாக பயன்படுத்தியதாலேயே, தற்போது இவை ஈரானின் இலக்குகளாக மாற்றப்பட்டுள்ளன. இது ஐக்கிய அரபு அமீரகத்தின் மீதான ஈரானின் நேரடி போர் பிரகடனமாகவே கருதப்படுகிறது.
புஜைரா மட்டுமன்றி, அபுதாபி தேசிய எண்ணெய் கழகமும் ஈரானின் இலக்காக மாறியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு பங்களிப்பை வழங்கும் இந்த நிறுவனம் முடக்கப்பட்டால், அந்நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் நிலைகுலையும் அபாயம் உள்ளது. வளைகுடா நாடுகள் தங்கள் மண்ணில் அமெரிக்க ராணுவத்தை அனுமதிக்கக் கூடாது என்றும், அவ்வாறு அனுமதித்தால் அமெரிக்காவின் உள்கட்டமைப்புகள் மட்டுமின்றி அந்த நாடுகளின் சொந்த சொத்துக்களும் அழிக்கப்படும் என்றும் ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது வளைகுடா நாடுகளுக்கு ஈரான் கொடுக்கும் மிக கடுமையான அழுத்தமாக பார்க்கப்படுகிறது.
தற்போதைய போர்ச்சூழலால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலவி வரும் ஜிபிஎஸ் சிக்னல்கள் முடக்கப்பட்டுள்ளன. ஈரானின் ‘ஷாஹத்’ ட்ரோன்கள் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தித் தாக்குதல் நடத்துவதை தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஈரானின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் முயற்சியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் போர் விமானங்கள் ஈடுபட்டுள்ளன. இதனால் அந்நாட்டில் நடைபெறவிருந்த பல சர்வதேச நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டினர் மற்றும் முதலீட்டாளர்கள் அந்நாட்டை விட்டு வெளியேற தொடங்கியுள்ளதால், அமீரகத்தின் சுற்றுலா மற்றும் வர்த்தகத்துறை பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் வரலாற்றிலேயே முதல்முறையாக இத்தகைய கடுமையான போர்ச்சூழலை அந்நாடு எதிர்கொள்கிறது. வளைகுடா பிராந்தியத்தில் அமைதியான நாடாக கருதப்பட்ட அமீரகம், தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் மோதலுக்கு இடையே சிக்கி கொண்டுள்ளது. கார்க் தீவு மீதான தாக்குதலுக்கு பழிவாங்க துடிக்கும் ஈரான், தனது அடுத்தகட்ட தாக்குதல்களை இன்னும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உலகளாவிய எரிபொருள் விலையேற்றம் மற்றும் பொருளாதார மந்தநிலைக்கு வழிவகுக்கும் என்பதால், சர்வதேச நாடுகள் இந்த போரைத் தடுத்து நிறுத்த தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
