மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் தனது பிரம்மாண்டமான நிலத்தடி ‘ஏவுகணை நகரத்தின்’ காட்சிகளை வெளியிட்டு உலக நாடுகளை அதிரவைத்துள்ளது. ஈரானிய புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், பல மைல் தூரத்திற்கு நீண்டு செல்லும் சுரங்கப்பாதைகளில் வரிசை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஏவுகணைகள் மற்றும் ‘ஷாஹித்’ ரக ட்ரோன்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, கொல்லப்பட்ட ஈரானின் உயர்மட்டத் தலைவர் அலி காமேனியின் உருவப்படத்திற்கு முன்னால் இந்த ஆயுதங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இது வெறும் ராணுவ பலத்தை காட்டுவது மட்டுமல்லாமல், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நிலத்தடி தளத்தின் மிக முக்கியமான அம்சம் ஈரானின் மலிவு விலை ட்ரோன் தொழில்நுட்பம் ஆகும். சில பத்தாயிரம் டாலர்கள் செலவில் மிகக்குறுகிய காலத்தில் தயாரிக்கப்படும் ‘ஷாஹித்’ ட்ரோன்கள், நவீன போர்க்களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. லாரிகளில் பொருத்தப்பட்ட ஏவுகணை தளங்கள் மூலம் இந்த ட்ரோன்கள் ஏவப்படுவதை காட்டும் காட்சிகள், ஈரான் எந்த நேரத்திலும் ஒரு பெரிய அளவிலான தாக்குதலை தொடுக்க தயாராக இருப்பதையே உணர்த்துகின்றன. இவ்வளவு பிரம்மாண்டமான ஆயுதக்கிடங்கை ஈரான் நிலத்தடியில் பாதுகாப்பாக வைத்திருப்பது, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் வான்வழி தாக்குதல்களில் இருந்து தனது முதன்மை ஆயுதங்களை பாதுகாக்க ஈரான் வகுத்துள்ள வியூகத்தின் ஒரு பகுதியாகும்.
ஈரானின் இந்த மலிவு விலை ஆயுதங்கள், அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் பொருளாதாரத்தை மறைமுகமாக பாதித்து வருகின்றன. ஒரு ஷாஹித் ட்ரோனின் விலை மிகக்குறைவு, ஆனால் அதை சுட்டு வீழ்த்த பயன்படுத்தப்படும் அமெரிக்க தயாரிப்பு ‘பேட்ரியாட்’ ஏவுகணையின் விலை சுமார் 40 முதல் 50 லட்சம் டாலர்கள் ஆகும். அதேபோல், THAAD எனப்படும் ஏவுகணை தடுப்பு அமைப்பின் ஒரு ஏவுகணை சுமார் 1.3 கோடி டாலர்கள் வரை செலவாகும். அதாவது, எதிரி நாடுகள் ஈரானின் மலிவு விலை ட்ரோன்களை தடுக்க தங்கள் கஜானாவை காலி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.
பாதுகாப்பு நிபுணர்களின் ஆய்வின்படி, ஈரான் தனது தாக்குதல்கள் மூலம் அமெரிக்க கூட்டணியின் அதிநவீன ஆயுதங்களை வேகமாக தீர்த்து வருகிறது. உதாரணமாக, ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் ஏவிய 541 ட்ரோன்களில் 92 சதவீதத்தை அமீரகம் சுட்டு வீழ்த்தியது. ஆனால், இதற்காக ஈரான் செலவிட்ட தொகை வெறும் 1.1 கோடி முதல் 2.7 கோடி டாலர்கள் மட்டுமே. அதே சமயம், அந்த ட்ரோன்களை தடுக்கப் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகளுக்காக அமீரகம் மற்றும் அதன் நட்பு நாடுகள் பல நூறு கோடி டாலர்களை செலவிட வேண்டியிருந்தது. இது ஈரானுக்கு ராணுவ ரீதியாக மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் ஒரு பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.
இஸ்ரேலிய ராணுவம் ஈரானின் ஏவுகணை திறனைப் பற்றித் தற்போது வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது. பலத்த பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் ஈரான் தன்னிடம் இன்னும் கணிசமான ஏவுகணைகளை இருப்பு வைத்திருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரானின் இந்த நிலத்தடி சுரங்கங்கள் வான்வழி தாக்குதல்களால் எளிதில் அழிக்க முடியாத ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுரங்கப்பாதையிலும் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எப்போது வேண்டுமானாலும் ஒரு மிகப்பெரிய மோதல் வெடிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஈரானின் இந்த ஆயுத கண்காட்சி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டணியின் வான் பாதுகாப்பு சுவர் எந்த அளவிற்கு தாக்கு பிடிக்கும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்தை விட, ‘வெகுஜன உற்பத்தி’ மற்றும் ‘குறைந்த செலவு’ ஆகிய இரண்டு காரணிகள் ஈரானுக்கு பெரும் பலத்தை தந்துள்ளன. தற்போதைய சூழலில், அமெரிக்கா தனது விலை உயர்ந்த ஏவுகணைகளை தொடர்ந்து பயன்படுத்துமா அல்லது ஈரானின் இந்த மலிவு விலை ட்ரோன்களுக்கு மாற்று உத்தியை கண்டுபிடிக்குமா என்பதை பொறுத்தே இந்த போரின் முடிவு அமையும்
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
