மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் தற்போது ஒரு முழு அளவிலான போரை நோக்கி நகர்ந்துள்ள நிலையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு எதிராக அறிவித்த இந்த போர் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள சூழலில், பாக்தாத்தின் அதீத பாதுகாப்பு வளையமான ‘கிரீன் ஜோன்’ பகுதிக்குள் இந்த ஏவுகணை ஊடுருவி, அமெரிக்க தூதரக வளாகத்தில் உள்ள ஹெலிபேட் தளத்தை தாக்கியுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து தூதரக கட்டிடத்திலிருந்து கரும்புகை வெளியேறுவதை காண முடிந்தது. இத்தாக்குதல் குறித்து அமெரிக்க தூதரகம் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்றாலும், ஈராக் பாதுகாப்பு அதிகாரிகள் ஏவுகணை தூதரக எல்லைக்குள் விழுந்ததை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த மோதலின் பின்னணியில் ஈரானின் மிக முக்கியமான பொருளாதார மையமான கார்க் தீவின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ஈரானின் மகுடமாக திகழும் கார்க் தீவில் உள்ள அனைத்து இராணுவ இலக்குகளையும் அமெரிக்க படைகள் முற்றிலும் அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்திற்கும் மேலாக கையாளும் இந்த தீவின் மீது நடத்தப்பட்ட தாக்குதலானது, ஈரானின் பொருளாதார முதுகெலும்பை உடைக்கும் ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் தனது தாக்குதல்களை தொடர்ந்தால், அந்த தீவில் உள்ள ஒட்டுமொத்த எண்ணெய் உள்கட்டமைப்பையும் தரைமட்டமாக்க போவதாக டிரம்ப் எச்சரித்துள்ளார்.
பாக்தாத் தூதரகத்தின் மீதான தாக்குதல் என்பது அமெரிக்காவின் இறையாண்மைக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகவே வாஷிங்டனால் பார்க்கப்படுகிறது. ஈரானின் ஆதரவு பெற்ற ஆயுத குழுக்கள் ஈராக்கில் மிக வலுவாக செயல்பட்டு வருவதால், அமெரிக்க இலக்குகள் மீதான தாக்குதல்கள் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. குறிப்பாக, தூதரகத்தின் ஹெலிபேட் தளத்தை தாக்கியதன் மூலம், தங்களால் மிக துல்லியமாக அமெரிக்க படைகளை இலக்கு வைக்க முடியும் என்ற செய்தியை ஈரான் மறைமுகமாக சொல்லியுள்ளது. இதற்கு பதிலடியாக அமெரிக்கா ஈரானுக்குள் உள்ள மேலும் பல முக்கிய இராணுவ மற்றும் அணுசக்தி தளங்களை இலக்கு வைக்க திட்டமிட்டுள்ளதாகப் பென்டகன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மோதல் வரும் நாட்களில் எந்த திசையை நோக்கி நகரும் என்பது உலக நாடுகளின் கவலையாக உள்ளது. ஒருவேளை ஈரான் தனது வான் பாதுகாப்பு அமைப்புகளை கொண்டு அமெரிக்காவின் மேலும் சில முக்கிய பகுதிகளில் தாக்குதல்களை தொடுத்தாலோ அல்லது ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக மூடினாலோ, உலக பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத ஒரு நெருக்கடியை சந்திக்கும்.
பாக்தாத் தூதரக தாக்குதலானது இந்த போரின் ஒரு சிறிய தொடக்கம் மட்டுமே என்று ராணுவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கை ஈரானின் ஆட்சி அதிகாரத்தையே அச்சுறுத்தும் வகையில் அமையக்கூடும் என்பதால், மத்திய கிழக்கு தற்போது ஒரு எரிமலை குழம்பின் மீது அமர்ந்திருப்பதை போன்ற பதற்றமான சூழலில் உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
