தப்பு பண்ணிட்டியே டிரம்பு.. இனி தப்பிக்கவே முடியாது.. அமெரிக்காவின் நட்பு நாடுகள் ஒருத்தரையும் விட மாட்டேன்.. பஹ்ரைன், சவுதி அரேபியா, துபாய், அபுதாபி, ஐக்கிய அமீரகம் மீது ஈரான் சரமாறி தாக்குதல்.. இஸ்ரேலும் தப்பவில்லை.. பிரிட்டனுக்குள் நுழைந்த ஈரான் உளவாளிகள்.. பாதாளத்தில் பதுக்கி வைத்த லட்சக்கணக்கான ட்ரோன்களை வெளியே எடுக்கும் ஈரான்..

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர் ஆறாவது நாளை எட்டியுள்ள நிலையில், மோதல்கள் அண்டை நாடுகளுக்கும் பரவி பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளன. இன்று அதிகாலை ஈரான் நடத்திய ஏவுகணை…

iran attack cia

மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மூண்டுள்ள போர் ஆறாவது நாளை எட்டியுள்ள நிலையில், மோதல்கள் அண்டை நாடுகளுக்கும் பரவி பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளன. இன்று அதிகாலை ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் உள்ள பிரம்மாண்டமான ‘கிரவுன் பிளாசா’ ஹோட்டல் மற்றும் இரண்டு குடியிருப்புகள் கடுமையாக சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக இதில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என பஹ்ரைன் அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் மற்றும் அதன் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. சவுதி வான் பாதுகாப்பு படை பல ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியிருந்தாலும், பிராந்தியத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த ராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா தனது அதிநவீன பி-2 ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்களை பிரிட்டனில் உள்ள விமான தளங்களுக்குக் கொண்டு வந்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையில், மிகப்பெரிய அலை இன்னும் வரவில்லை என்றும், ஈரானின் அணு ஆயுத மற்றும் ஏவுகணை தளங்களை முழுமையாக அழிக்க இன்னும் கடுமையான தாக்குதல்கள் தொடரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் இந்த தயார் நிலை, போர் இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என்பதையும், தரைவழி தாக்குதல்களுக்கான வாய்ப்புகள் இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறது. இதன் காரணமாகத் தெஹ்ரானில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களை தேடி நகரங்களை விட்டு வெளியேறி வருகின்றனர்.

மறுபுறம், துபாய் மற்றும் அபுதாபியில் உள்ள பொதுமக்களுக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு அவசரகால எச்சரிக்கையை விடுத்துள்ளது. “ஏவுகணை தாக்குதல் அபாயம் உள்ளதால், ஜன்னல்கள் மற்றும் திறந்தவெளிகளிலிருந்து விலகி பாதுகாப்பான கட்டிடங்களுக்குள் தஞ்சம் புகுங்கள் என குறுஞ்செய்திகள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. துபாயில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே ட்ரோன்கள் விழுந்து வெடித்தது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வளைகுடா நாடுகளில் நிலவும் இந்த அமைதியற்ற சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

எரிசக்தி சந்தையின் தற்போதைய நிலவரம் குறித்து கத்தார் எரிசக்தி துறை அமைச்சர் சாத் அல்-காபி விடுத்துள்ள எச்சரிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த போர் நீடித்தால், கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 150 டாலர் வரை உயரும் என்றும், இது உலக பொருளாதாரத்தையே வீழ்ச்சியடைய செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கத்தார் தனது திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. வளைகுடா நாடுகளிலிருந்து எரிசக்தி விநியோகம் தடைப்பட்டால், வளரும் நாடுகள் பணவீக்கத்தைச் சந்திக்க நேரிடும் என்பது பொருளாதார வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது.

லெபனான் எல்லையில் இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பின் தளங்கள் மற்றும் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள முக்கிய கட்டிடங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஹிஸ்புல்லா அமைப்பின் உளவுத்துறை தலைவர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதற்கு பதிலடியாக ஹிஸ்புல்லா இஸ்ரேலின் வடக்கு நகரங்கள் மீது ராக்கெட்டுகளை ஏவி வருகிறது. லெபனான் அரசாங்கம் தனது நாட்டுப் பகுதியில் இருந்து நடத்தப்படும் தாக்குதல்களுக்குத் தடை விதித்திருந்தாலும், போரின் தீவிரம் குறைந்தபாடில்லை.

இந்த மோதல்களின் தாக்கம் ஐரோப்பா வரை நீண்டுள்ளது. லண்டனில் உள்ள யூத சமூகத்தினர் மற்றும் முக்கிய இடங்களை கண்காணித்து ஈரானிய உளவுத்துறைக்கு தகவல் அளித்ததாக சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை லண்டன் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் ஈரானிய மற்றும் பிரிட்டிஷ்-ஈரானிய இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டனில் ஈரானின் சதித்திட்டங்கள் அதிகரித்துள்ளதாக எம்.ஐ.5 உளவுத்துறை எச்சரித்துள்ளது. சர்வதேச எல்லைகளை கடந்து விரிவடைந்து வரும் இந்த போர், ஒரு மூன்றாம் உலகப் போருக்கான அச்சத்தை உலக நாடுகளிடையே விதைத்துள்ளது.