மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் போர்ச்சூழல் என்பது வெறும் ஏவுகணை தாக்குதல்களோ அல்லது எல்லை பிணக்குகளோ மட்டுமல்ல, அது நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் ஒரு தீவிரமான ‘சைபர் போர்’ முறையாக உருவெடுத்துள்ளது. பிப்ரவரி 28 அன்று ஈரானில் மக்கள் தொழுகை முடிந்து வெளியே வந்த நேரத்தில், அங்கு மிகவும் பிரபலமான ‘பாத் சபா’ என்ற செயலி மூலமாக விசித்திரமான அறிவிப்புகள் அனுப்பப்பட்டன. வழக்கமாக தொழுகை நேரங்களையும் ஆன்மீக தகவல்களையும் வழங்கும் அந்த செயலியில், திடீரென “அநீதிக்கு எதிராக எழுந்து நில்லுங்கள்”, “உதவி வந்துவிட்டது” போன்ற வாசகங்கள் திரையில் தோன்றின. இந்த சைபர் தாக்குதல் நடந்த சில நிமிடங்களிலேயே தெஹ்ரான் மீது வான்வழி தாக்குதல்கள் தொடங்கின என்பது, ஒரு நாட்டின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை முடக்கிவிட்டு அதன் பிறகு ராணுவ தாக்குதலை நடத்துவது எவ்வளவு அபாயகரமானது என்பதை காட்டுகிறது.
இதேபோன்ற ஒரு சைபர் தாக்குதல் தற்பொழுது பாகிஸ்தானிலும் எதிரொலித்துள்ளது அந்நாட்டு ஊடகவியலாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் முன்னணி ஊடகங்களான ‘ஜியோ டிவி’ மற்றும் ‘ஏஆர்ஒய்’ ஆகியவற்றின் இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டு, பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிரான கருத்துகள் அதில் பதியப்பட்டன. ஈரானில் பயன்படுத்தப்பட்ட அதே பாணியிலான முழக்கங்கள் இங்கும் தென்பட்டதால், இது இந்தியா அல்லது இஸ்ரேலின் சதி என பாகிஸ்தான் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. ஆனால், இந்த தாக்குதல்கள் ஒரு நாட்டின் உள்நாட்டு சூழலை குலைக்கவும், மக்களிடையே ராணுவத்திற்கு எதிரான அதிருப்தியை உருவாக்கவும் திட்டமிட்டு நடத்தப்படுவதாக பாதுகாப்பு வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இந்த ஒட்டுமொத்த போரின் பின்னணியில் ‘இஸ்லாமிய உலகின் தலைமை’ யார் என்ற அதிகார போட்டி ஒளிந்திருக்கிறது. சவுதி அரேபியா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான வரலாற்று ரீதியான ஷியா-சுன்னி பிணக்கு இப்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. வெளிப்படையாக தங்களின் வான்பரப்பையோ அல்லது நிலத்தையோ அமெரிக்கா பயன்படுத்த அனுமதிப்பதில்லை என்று சவுதி அரேபியா கூறினாலும், திரைமறைவில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோருடன் நெருக்கமான ஆலோசனைகளை நடத்தியுள்ளதாக தெரிகிறது. முந்தைய தாக்குதல்கள் ஈரானை முழுமையாக முடக்கவில்லை என்றும், இந்த முறை ஈரானிய ஆட்சியை தூக்கியெறியும் வகையில் கடுமையான தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்றும் சவுதி தரப்பு அமெரிக்காவை தூண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம் நாடுகளில் ஈரானுக்கு ஆதரவாக போராட்டங்கள் வெடித்தாலும், அரபு நாடுகளான சவுதி, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான் மற்றும் எகிப்து போன்றவற்றில் அத்தகைய கொந்தளிப்புகள் காணப்படவில்லை. இது அந்த நாடுகளின் தலைமைகள் ஈரானின் வீழ்ச்சியை விரும்புவதையே காட்டுகிறது. ஷியா மெஜாரிட்டி கொண்ட ஈராக் போன்ற ஒரு சில இடங்களை தவிர, மற்ற அரபு நாடுகள் அமைதி காப்பது அவர்களின் அரசியல் உள்நோக்கத்தை பறைசாற்றுகிறது. இஸ்லாமிய உலகின் தலைவராக யார் உருவெடுப்பது என்ற போட்டியில், ஈரான் ஒரு பெரும் தடையாக இருப்பதாக சவுதி அரேபியா கருதுகிறது. இதற்காக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் கைகோர்க்கவும் அவை தயங்கவில்லை.
இந்த சூழலில் துருக்கி போன்ற நாடுகள் மௌனம் காப்பது கவனிக்கத்தக்கது. நேட்டோ அமைப்பில் உறுப்பினராக இருக்கும் துருக்கி, ஐரோப்பிய எல்லைகளுக்குள் போர் பரவுவதை விரும்பவில்லை. மேலும், நேட்டோ அமைப்பிற்குள் தற்போது ஏற்பட்டுள்ள விரிசல்கள் அந்த அமைப்பின் வலிமையை குறைத்துள்ளன. மறுபுறம், கத்தார் போன்ற நாடுகள் இந்த விவகாரத்தில் யாருடைய பக்கம் நிற்கின்றன என்பதும் ஒரு புரியாத புதிராகவே உள்ளது. ஈரான் மீது நடத்தப்படும் இந்த தாக்குதல்கள் வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, அது ஈரானில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்து, தங்களுக்கு சாதகமான ஒரு பொம்மை அரசாங்கத்தை நிறுவும் அரபு நாடுகளின் நீண்ட கால திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
சுருக்கமாகச் சொன்னால், மத்திய கிழக்கில் நடக்கும் இந்தப் போர் என்பது இஸ்ரேல்-அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகியவற்றுக்கு இடையிலான மோதல் என்பதை தாண்டி, அரபு நாடுகளுக்குள்ளேயே நிலவும் அதிகார போட்டியின் வெளிப்பாடாகும். எண்ணெய் வளம், பணம் மற்றும் மதத்தலைமை ஆகியவற்றை தக்கவைத்துக் கொள்ள, ஒரு முஸ்லிம் நாடு மற்றொரு முஸ்லிம் நாட்டின் மீது தாக்குதல் நடத்த பல்லாண்டு காலப் பகைமை கொண்ட நாடுகளுடன் கூட்டணி சேர்கிறது. இந்த ‘ஜியோபாலிடிக்ஸ்’ விளையாட்டு உலக பொருளாதாரத்தையும், குறிப்பாக எரிசக்தி சந்தையையும் நிலைகுலைய செய்துள்ளது. இந்த போரின் முடிவு ஈரானின் எதிர்காலத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகின் அரசியல் வரைபடத்தையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
