ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், ஒரு போட்டியை நேரடியாக பார்க்க டிக்கெட் கிடைக்குமா என பலர் ஆர்வமாக இருக்கின்றனர். இந்த சூழலில், வாட்ஸ் அப் மூலம் “ஐபிஎல் டிக்கெட் இலவசமாக வேண்டுமா? இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்” என்று வரும் மெசேஜ்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், அந்த மெசேஜ்களை கிளிக் செய்தால், நம்முடைய சொத்துக்களையும் தகவல்களையும் அபகரிக்கும் வகையில் மோசடிகள் நடைபெறக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பல ஐபிஎல் மற்றும் கால்பந்து விளையாட்டு ரசிகர்களுக்கு, தற்போது வாட்ஸ் அப் மூலம் ஸ்பாம் மெசேஜ்கள் வந்து கொண்டிருக்கின்றன. “நீங்கள் ஒரு அதிர்ஷ்டசாலி! உங்களுக்கு ஐபிஎல் போட்டியை பார்க்க டிக்கெட் இலவசமாக கிடைக்கிறது. உடனடியாக இந்த டெலிகிராம் லிங்கை கிளிக் செய்யுங்கள்” என்று மெசேஜ்கள் வருகின்றன.
இந்த மெசேஜ்களை தெரியாமல் கிளிக் செய்தால், உங்கள் மொபைல் ஹேக் செய்யப்படும். அதன் பிறகு, உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள அனைத்து பணமும் மோசடி செய்யப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, இது போன்ற மோசடி மெசேஜ்கள் வந்தால், அந்த லிங்குகளை கிளிக் செய்யவேண்டாம். குறிப்பாக, சர்வதேச எண்களிலிருந்து வரும் எந்த இணைப்பையும் கிளிக் செய்யக் கூடாது. உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருட இந்த மாதிரியான முயற்சிகள் செய்யப்படலாம். சந்தேகத்திற்கிடமான எந்த தொடர்புகளையும் உடனடியாக காவல்துறைக்கு புகார் அளிக்க வேண்டும்.
எந்த காரணத்திற்கும் தனிப்பட்ட விவரங்களை பகிரக் கூடாது. ஸ்பாம் செய்திகளில் விளம்பரப்படுத்தப்படும் அறியாத இணையதளங்களில் உங்கள் தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டாம். தொழில்நுட்ப வளர்ச்சியால் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், பயனர்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.