இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு, PVR Inox திரையரங்கம் பிசிசிஐ உடன் ஒப்பந்தம் செய்து, தங்களது திரையரங்குகளில் ஐபிஎல் போட்டிகளை திரையிட அனுமதி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 30க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்த போட்டிகளை PVR Inox திரையரங்குகளில் நேரடியாக ஒளிபரப்ப ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
நேற்றைய தொடக்க விழா, வார இறுதி போட்டிகள், பிளே-ஆஃப் சுற்றுகள் உள்ளிட்ட முக்கியமான போட்டிகளை மட்டும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து PVR Inox தலைமை நிர்வாக அதிகாரி கூறியதாவது: “இந்தியாவைப் பொறுத்தவரை, திரைப்படங்களையும் கிரிக்கெட்டையும் பிரிக்க முடியாது. இரண்டிற்குமே கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அதனால், ஐபிஎல் போட்டிகளை நேரடியாக திரையிட முடிவு செய்துள்ளோம். கடந்தாண்டு, ஐபிஎல் நேரலையின் போது ரசிகர்களிடம் இருந்து கிடைத்த அபாரமான வரவேற்பு காரணமாகவே, இந்த ஆண்டும் இதை முன்னெடுத்துள்ளோம். விளையாட்டின் மகிழ்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இதை ஒரு அரிய வாய்ப்பாக பார்க்கிறோம்.”
இந்த ஆண்டில், ஐபிஎல் 2025 போட்டிகள் முக்கியமான பெரிய நகரங்களில் மட்டுமே திரையிடப்பட உள்ளன. குறிப்பாக, மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்காளம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும், தமிழ்நாடு உள்ளிட்ட சில தென்னிந்திய மாநிலங்களிலும் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், PVR Inox அதிகாரப்பூர்வ செயலிகள் மற்றும் வலைத்தளங்களில் இந்த போட்டிகளை பார்க்க டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில், சினிமா மற்றும் கிரிக்கெட் ஆகிய இரண்டிற்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. அதனால், திரையரங்குகளில் கிரிக்கெட் பார்ப்பது ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். இதற்கு ரசிகர்கள் முழு ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.