தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து தனது எக்ஸ் தளத்தில் தமிழக அரசுக்கு கோரிக்கையை விடுத்துள்ளார். அப்பதிவில் அவர் கூறியுள்ளதாவது,
சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம், முன்பை விட நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், அவர்களுக்கான பாதுகாப்பு இன்றும் கேள்விக்கு உரியதாகவே இருக்கிறது. பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக வரும் செய்திகள் துயரம் அளிக்கின்றன.
பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க, நீதித் துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு, அரசு தனி இணையத்தளத்தை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு யோசனை தெரிவித்துள்ளது. இதற்கு மதிப்பளித்து, தமிழக அரசு தனி இணையத்தளத்தை உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தில் வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அந்தப் பதிவில் விஜய் கூறியிருக்கிறார்.
இதுமட்டுமல்லாது கடந்த நவம்பர் 14-அன்று குழந்தைகள் தின வாழ்த்தும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
புரட்சித் தமிழன் பட்டத்துக்கு நான் தகுதியான ஆளே கிடையாது.. சத்யராஜ் அதிரடி பேச்சு..
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25-ம் தேதி சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கும் நோக்கில் கடைபிடிக்கப்படுகிறது. கடந்த 1981-ம் ஆண்டு முதல் பெண் உரிமை ஆர்வலர்கள் இந்த நாளை பெண்கள் வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச நாளாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.
43 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் இன்றும் பெண்கள் மீதான தாக்குதல், வன்முறை, பாலியல் பலாத்காரம், வன்புணர்வு போன்ற குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கிறது. உலகின் பல நாடுகள் இது குறித்து சட்டங்களை வலுவாக இயற்றினாலும், கடுமையான தண்டனைகளைக் கொடுத்தாலும் சில சம்பவங்கள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.