நீண்ட காலத்திற்கு செய்யப்பட்ட காப்பீடு ஒன்றை உடனடியாக முடித்துக் கொள்ளலாம், லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என்று உங்களுக்கு ஒரு அழைப்பு வருகிறது என்றால், உஷாராகுங்கள். அது உண்மையில் காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து வந்த அழைப்பாக இருக்காது. மோசடியாளர்கள் இடமிருந்து வந்த அழைப்பாக இருக்கும், என்பதை புரிந்து கொண்டு சுதாரித்துக் கொள்ளுங்கள்.
பெங்களூரை சேர்ந்த ஒருவர் 2014 ஆம் ஆண்டு பணி ஓய்வெப்புக்கு பின்னால் தனது மாத வருமானத்திற்கு ஓய்வூதிய காப்பீடு ஒன்றை எடுத்துள்ளார். இந்த காப்பீடு, வருடத்திற்கு ஒரு லட்சம் பிரீமியம் செலுத்தினால், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மாதம் 6000 ரூபாய் மாத வருமானமாக 2032 வரை வரும், என்பதுதான் காப்பீட்டின் விவரம்.
ஆனால் திடீரென, அவருக்கு சமீபத்தில் ஒரு அழைப்பு வந்துள்ளது. “உங்களுக்கு வரவேண்டிய மாத தொகை 6000 மற்றும் போனஸ் தொகை 10 லட்சம் ஆகியவற்றை சேர்த்து, மொத்தமாக 30 லட்சத்தை இப்போதே பெற்றுக் கொள்ளலாம்” என்று கூறி இருக்கின்றனர். உடனே மகிழ்ச்சியில் மிதந்த அவர், அதற்காக என்ன செய்ய வேண்டும் என்று கேட்கும் போது, அதற்காகவே காத்திருந்தது போல், உங்களுடைய 30 லட்சம் பணத்தை நீங்கள் உடனடியாக பெற வேண்டும் என்றால், அதற்காக மூன்று லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளனர்.
30 லட்சம் வரப்போகிறது என்ற ஆசையில், அவர் மூன்று லட்சம் கட்டிய நிலையில், அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை கறந்து கிட்டத்தட்ட 90 லட்சம் வரை ஏமாற்றியுள்ளனர். அதன் பிறகு தான், அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
எனவே, ஏற்கனவே நீங்கள் போட்டிருந்த காப்பீட்டை உடனடியாக முடித்துக் கொண்டால் லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும்” என்று ஆசை வார்த்தை காட்டும் அழைப்பு வந்தால், உடனே சுதாரித்துக் கொண்டு, அது மோசடி அழைப்பு என்பதை புரிந்து கொள்ளுங்கள். அல்லது, நீங்கள் முதலீடு செய்த காப்பீட்டு நிறுவனத்தில் இது குறித்து அழைப்பு வந்திருக்கிறது, அது உண்மைதானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.