நாராயண மூர்த்தியின் இன்போசிஸ் நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 9 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பியூன் வேலை பார்த்து வந்த இளைஞர் ஒருவர், இன்று தனது விடாமுயற்சியால் இரண்டு நிறுவனங்களுக்கு ஓனர் ஆகியுள்ளார் என்றும், அவரது வருமானம் கோடி கணக்கில் உருவாகியுள்ளது என்றும் கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிறிய கிராமத்தில், எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர் தான் சங்க்வி பதான். இவரது பெற்றோர் வறுமையாக இருந்ததால், சிறுவயதிலேயே பல சிக்கல்களை சந்தித்த இவர், படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
ஐடிஐ டிப்ளமோ படிப்பை முடித்த பிறகு, புனே நகருக்கு சென்று இன்போசிஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். மாத சம்பளம் வெறும் ஒன்பதாயிரம் மட்டுமே! ஆனால் அதே நேரத்தில், ஐடி துறையில் உள்ள முக்கியத்துவத்தை அவர் உணர்ந்து, காலை முதல் மாலை வரை அலுவலகத்தில் வேலை செய்து, இரவு முழுவதும் படிப்பு என்று தனது திறனை வளர்த்துக் கொண்டார்.
அனிமேஷன் மற்றும் டிசைனிங் படிப்பில் ஆர்வம் இருந்ததால், அது சம்பந்தப்பட்ட இரவு வகுப்புகளில் சேர்ந்து படித்தார். அனிமேஷன் படிப்பை முடித்த பிறகு, மும்பையில் ஒரு நல்ல வேலை கிடைத்தது. அதன் பிறகு, அவர் ஹைதராபாத்துக்கு மாற்றமாக அங்கு Python, C++ போன்ற கணினி மொழிகளை கற்றுக் கொண்டார்.
அதனை அடுத்து, புணேவில் சொந்தமாக ஒரு அனிமேஷன் நிறுவனத்தை திறந்து, அதில் 15 டிசைனர்களை தனது குழுவில் இணைத்தார். அவரது நிறுவனம் படிப்படியாக வளர்ச்சி அடைந்து, ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கில் லாபம் தரும் நிறுவனமாக மாறியது.
கொரோனா காலத்திலும் கூட, அவரது வருமானம் குறையவில்லை என்பதும், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அனிமேஷன் திரைப்படங்களுக்கு அனிமேஷன் நூலகம் உருவாக்குவதில் முயற்சி செய்து, அவர் DooGraphics’ என்ற இணையதளத்தை உருவாக்கினார். இது கேன்வா போன்று செயல்படும் ஒரு டிஜிட்டல் வடிவமைப்பு தளமாகும்.
இதனை அடுத்து, திரைப்படங்களுக்கு அனிமேஷன் செய்து கொடுக்கும் பணியையும் தொடங்க, ஒரு புதிய நிறுவனத்தை ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கினார். இந்த நிறுவனம், பல ஹாலிவுட் படங்களுக்கும் அனிமேஷன் பணிகளை செய்து கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விடா முயற்சி, உழைப்பு, கனவு, போராட்டம் ஆகியவை இருந்தால், ஒரு பியூன் வேலை பார்ப்பவர்கூட எதிர்காலத்தில் மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆகலாம் என்பதற்குச் சிறந்த முன்னுதாரணம் இவர் தான்!