கடந்த வாரம் இன்ஸ்டாகிராமை திறந்தபோது, இந்திய நிறுவனங்கள் ஏதோ பெரிய நெருக்கடியில் சிக்கியதுபோல் காட்சியளித்தன. சோகமான வெள்ளை பின்னணிகள், கண்ணியமான நிறுவன லெட்டர்ஹெட் மற்றும் ஒரே மாதிரியான தொடக்கத்துடன் கூடிய செய்திகள்: “நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறோம்.”
சாதாரணமாக இதை நீங்கள் பார்த்தால், ஏதோ ஒரு பெரிய ஊழலுக்காகவோ அல்லது தவறுக்காகவோ நிறுவனம் மன்னிப்பு கேட்கிறது என எதிர்பார்த்திருப்பீர்கள். ஆனால், நீங்கள் அதிலுள்ள வரிகளை படித்தபோது, ”நாங்கள் மிகவும் சிறப்பாக செயல்படுவதற்காக மன்னிப்பு கோருகிறோம்” என்ற தொனியில் இருந்தன. அதாவது, எந்தவொரு நெருக்கடியோ, தவறோ இல்லை; தங்கள் தயாரிப்புகள் மிகவும் அசத்தலாக இருப்பதற்காக பிராண்டுகள் ‘சாரி’ சொன்னது.
பொதுவாக, ஏதாவது தவறு நேர்ந்தால் மட்டுமே மன்னிப்பு கேட்கும் வழக்கம் இருந்தது. ஆனால், இந்த வைரல் டிரெண்ட் அந்த போக்கையே புரட்டி போட்டுவிட்டது. இந்த கலாசாரம் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸில் தொடங்கி, இந்தியாவில் கடந்த வாரம் வேகம் எடுத்தது. கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வாகன் இந்தியாவில் இந்த டிரெண்டை ஆரம்பித்த முதல் நிறுவனமாக இருந்தது. தங்கள் கார்கள் மிகவும் சிறப்பாக இருப்பதால் மன்னிப்பு கோருவதாக அவர்கள் ஒரு கடிதத்தை வெளியிட்டனர்.
விரைவில், அனைவரும் இதை பின்பற்றினர். கார் நிறுவனங்கள், சிமெண்ட் பிராண்டுகள், அதிக சுவையான ஸ்நாக்ஸ் பிராண்டுகள் என பட்டியல் நீண்டது. ஒரு சமையல்காரர் சுவையான ரெசிபிகளுக்காக மன்னிப்பு கோரினார். ஊடக நிறுவனங்கள் கூட, “உண்மையையும் நேர்மையையும் நிலைநிறுத்தியதற்காக” மன்னிப்பு கோருவதாக பதிவிட்டன. இது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.
இது FOMO (தவறவிட்டுவிடுவோமோ என்ற பயம்) அல்ல, மாறாக மன்னிப்பு கேட்காமல் தனித்து நிற்க நேரிடுமோ என்ற பயம் (FORO – Fear Of Standing Out by Not Apologizing). உங்கள் பிராண்ட் ஒரு போலியான ‘மன்னிப்பு’ கடிதத்தை வெளியிடவில்லை என்றால், நீங்கள் மார்க்கெட்டிங் செய்யவே இல்லையா?
உண்மையைச் சொன்னால், இது சுயபரிசோதனை பற்றியது அல்ல. குறுகிய கவனத்தை ஈர்க்கும் பொருளாதாரத்தில் தப்பிப்பிழைப்பதற்கான ஒரு முயற்சி. இந்த டிரெண்ட் மூன்று விஷயங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது:
1. மனிதத்தன்மையைக் காட்டுதல்: தங்களுக்கு ஒரு தனிப்பட்ட அடையாளம் இருப்பதாக நிறுவனங்கள் நினைக்கின்றன.
2. தயாரிப்பின் மீதான நம்பிக்கை: இது தங்கள் தயாரிப்பின் மீதான நம்பிக்கையை காட்டுகிறது.
3. வைரல் அலை: டிரெண்ட் ஏற்கனவே பலரால் பார்க்கப்படுவதால், அதன் மூலம் தங்கள் பிராண்டையும் பிரபலப்படுத்தலாம் என நம்புகின்றனர்.
ஆரம்பத்தில் வெளிவந்த சில ‘மன்னிப்பு’ கருத்துகள் புத்திசாலித்தனமாகவும், எதிர்பாராத விதமாகவும் இருந்தன. ஆனால், அதன் பிறகு வந்த அனைத்தும் ஒரே பாணியில் இருந்தன. ஒரு போலியான மன்னிப்பை எழுதுவது, அது புத்திசாலித்தனம் என பாசாங்கு செய்வது, சமூக ஊடகங்கள் கைதட்ட வேண்டும் என்று நம்புவது, கைதட்டல் இல்லையென்றால் ஏஜென்சியை குற்றம் சாட்டுவது – இதுதான் நிலைமை.
விரைவில் ஒரு கட்டத்தில், ஒரு பிராண்ட் உண்மையில் தவறு இழைத்து மன்னிப்பு கேட்க வேண்டிய நிலை வரலாம். அந்தச் சமயத்தில், இந்த அநாவசியமான மன்னிப்புகள், உண்மையான பொறுப்புணர்வை நகைப்புக்குரியதாக மாற்றிவிடும் அபாயம் உள்ளது. இது வெறுமனே சலிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்ல, இது மிகவும் சிக்கலான ஒரு விஷயம்.
இந்த மன்னிப்பு குறித்து பொதுமக்கள் கருத்து கூறியபோது, ‘சிலர் எங்களைச் சிரிக்க வைத்தீர்கள், சிலர் டிரெண்டுகளை வெறுக்க வைத்தீர்கள். சிலர் விவாதத்தை தூண்டினீர்கள். நாங்கள் உங்கள் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறோம். இப்போது, தயவுசெய்து மன்னிப்பு கேட்பதை நிறுத்துங்கள். அடுத்த முறை, ஒரு சிறந்த தயாரிப்பை உருவாக்குங்கள், ஒரு அருமையான கதையை சொல்லுங்கள் அல்லது தனித்துவமாக இருங்கள்!
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
