அமெரிக்காவின் பிரபல வர்ணனையாளரும், கருத்து கணிப்பாளருமான மார்க் மிட்செல், பெரிய அமெரிக்க நிறுவனங்கள் தங்களை இந்தியர்கள் இல்லாத நிறுவனமாக மாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். இந்த செயல்பாட்டில் பெருநிறுவனங்களுக்கு உதவ ஒரு ஆலோசனை குழுமத்தை தொடங்க விரும்புவதாகவும் அவர் X தளத்தில் பதிவிட்டிருந்தார். அவரது இந்த கருத்துகள், அமெரிக்க தொழில்நுட்பத் துறையில் இந்திய நிபுணர்களின் பங்கு குறித்து சமூக ஊடகங்களில் ஒரு தீவிர விவாதத்தை தூண்டியுள்ளது.
மிட்செல் தனது X தளப் பதிவில், “என் வாழ்க்கையில் இதை விட வேறு எதையும் நான் அதிகமாக விரும்பியது இல்லை: பெரிய நிறுவனங்களுக்கு ‘இந்திய மய நீக்கம்’ செய்ய உதவ ஒரு புதிய ஆலோசனை குழுமத்தை உருவாக்க போகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். மிட்செல், ராஸ்முசென் ரிப்போர்ட்ஸ் என்ற கருத்துக்கணிப்பு நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஆவார். அவர் ‘தி வார் ரூம்’ என்ற பாட்காஸ்டில் பேசும்போது, H-1B விசா திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் அதிகரித்து வரும் இந்திய நிபுணர்களின் எண்ணிக்கை குறித்து ஏற்கனவே விமர்சித்திருந்தார்.
H-1B விசா திட்டத்தில் இந்தியர்களின் ஆதிக்கம் குறித்து விமர்சித்ததுடன், ஆப்பிள் போன்ற உயர் நிறுவனங்களில் பணிபுரியும் ஒரு மூத்த H-1B டெவலப்பரை திருப்பி அனுப்புவது, பொருளாதார ரீதியாக பத்து சட்டவிரோத குடியேற்றக்காரர்களை நாடு கடத்துவதற்கு சமம். ஆனால் நாம் ஏன் அதை இன்னும் செய்யவில்லை என்று தெரியவில்லை. அவர்களில் பலர் ஆரம்ப நிலை ஊழியர்களாக இருந்தாலும், அவர்களில் பலர் பெருமளவில் பணம் சம்பாதிக்கிறார்கள்,” என்று தெரிவித்தார்.
“வெளிநாட்டில் பிறந்த பணியாளர்கள்” சிலிகான் பள்ளத்தாக்கை ‘இந்திய மயமாக்கியதால்’ 12 மில்லியன் அமெரிக்க தொழில்நுட்ப ஊழியர்கள் வேலையில்லாமல் உள்ளனர் என்று மார்க் மிட்செல் குற்றம் சாட்டினார். சிலிகான் பள்ளத்தாக்கில் நாடு முழுவதிலும் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த ரியல் எஸ்டேட் விலைகள் உள்ளன. அதன் பணியாளர்களில் மூன்றில் இரண்டு பங்கு வெளிநாட்டில் பிறந்தவர்கள் ஆவர். வால்மார்ட் கட்டிடங்களில் 85 முதல் 95 சதவீதம் வரை இந்திய நாட்டவர்கள் இருந்தனர். அதனால், அவர்கள் இந்த பாதைகள் வழியாக வந்து இந்த பணிகளை எடுத்துக்கொள்கிறார்கள்,” என்றும் அவர் கூறினார்.
அமெரிக்க நிறுவனங்கள், அமெரிக்க ஊழியர்களை ஒதுக்கிவிட்டு, குறைந்த செலவில் குடியேற்ற பணியாளர்களை சார்ந்திருப்பதாகவும் மிட்செல் குற்றம் சாட்டினார். அமெரிக்க நிறுவனங்கள் மூத்த அமெரிக்க பொறியாளர்களை புறக்கணிக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.
மேலும், “ஒரு H-1B டெவலப்பர் $90,000 சம்பாதிக்கின்றனர் என்றும் அமெரிக்கர்களுக்கு இதனால் வேலைவாய்ப்பு பறிபோகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மிட்செல்லின் இந்தக் கருத்துகள், சமீபத்திய அறிக்கை ஒன்று வெளியானதை தொடர்ந்து வந்துள்ளது. அந்த அறிக்கை, அமெரிக்க தொழில்நுட்ப பணியாளர்களில் சுமார் 66 சதவீதம் பேர் வெளிநாட்டில் பிறந்தவர்கள் என்பதை காட்டியது. இவர்களில் 23 சதவீதம் பேர் இந்தியர்கள் மற்றும் 18 சதவீதம் பேர் சீனர்கள் ஆவர். மிட்செல்லின் இந்த கருத்துகள், அமெரிக்காவின் தொழில்நுட்ப மற்றும் குடியேற்ற கொள்கைகள் குறித்த விவாதத்தை வலுப்படுத்தியுள்ளது.
மிட்செல்லின் “இந்திய மய நீக்கம்” என்ற கருத்து சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பை சந்தித்தது. பல பயனர்கள் அவர் மீது இனவெறி குற்றச்சாட்டுகளை வைத்தனர். ஒரு X பயனர், அமெரிக்காவில் உள்ள யாரும் அமெரிக்கர்கள் கிடையாது. அதுஒரு கண்டுபிடிக்கப்பட்ட வெற்று நிலப்பரப்பு.. இங்கிருப்பவர்கள் எல்லோருமே வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தான்.. சில நூற்றாண்டுகள் முன்பு வந்ததால் நீங்கள் அமெரிக்கர்கள் ஆக மாட்டீர்கள் என்று பதிலடி கொடுத்திருந்தார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
