வெளிநாடுகளில் வேலை செய்து தாய்நாட்டுக்கு பணம் அனுப்பும் நாட்டினர்களில் இந்தியர்கள் முதல் இடத்தில் இருப்பதாக சர்வே ஒன்றின் தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியா உள்பட பல நாடுகளில் உள்ள பொதுமக்கள் வெளிநாடு சென்றால் கைநிறைய சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்துடன் வெளிநாடு செல்கின்றனர் என்பதும் அமெரிக்கா உள்பட பல நாடுகளில் வெளிநாட்டினர் அதிகம் வேலை செய்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் வெளிநாட்டில் கடினமாக உழைத்து சேர்த்து வைத்த பணத்தை தங்களது தாய் நாட்டிற்கு அனுப்பியவர்களின் பட்டியலில் இந்தியர்கள் முதல் இடத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்தியர்கள் தாய் நாட்டிற்கு 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக அனுப்பி உள்ளதாகவும் இது ஒரு உலக சாதனை என்று கூறப்படுகிறது. இது குறித்து சர்வே எடுத்த தனியார் நிறுவனம் 2023 – 24 நிதியாண்டில் 107 பில்லியன் டாலரை இந்தியர்கள் தங்கள் தாய் நாட்டிற்கு அனுப்பி உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
இந்திய அரசு வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து 54 பில்லியன் டாலர் மட்டுமே முதலீடுகளை ஈர்த்த நிலையில் அதைவிட இருமடங்கு வெளிநாட்டுக்கு சென்ற இந்தியர்கள் தாய் நாட்டிற்கு பணத்தை அனுப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியர்கள் பெரும்பாலும் அமெரிக்காவில் இருந்து தான் தங்களது தாய் நாட்டிற்கு பணம் அனுப்பி உள்ளனர்.
இந்தியாவை அடுத்து வெளிநாட்டில் பணி செய்து தாய்நாட்டுக்கு பணம் அனுப்பியவர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது மெக்சிகோ. இந்நாட்டினர் வெளிநாட்டிலிருந்து தாய்நாட்டிற்கு 67 பில்லியன் டாலர் அனுப்பியுள்ளனர். சீனா, பிலிப்பைன்ஸ், எகிப்து ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
மேலும் இந்த ஆய்வின்படி வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பணவரத்து குறைந்துள்ளதாகவும் இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட தொகையில் 23 சதவீதம் அமெரிக்காவில் இருந்து தான் வந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இந்தியர்கள் பெரும்பாலும் தங்களது குடும்பத்திற்காகவும், சேமிப்புக்காகவும் சொத்து உள்ளிட்ட முதலீடு வாங்குவதற்காகவும் அனுப்பி வைத்துள்ளனர்.
வெளிநாடு சென்றாலும் அங்கேயே செட்டில் ஆகிவிட வேண்டும் என்ற நினைப்பு பெரும்பாலான இந்தியர்களுக்கு இல்லை என்றும் ஒரு குறிப்பிட்ட வருடங்கள் மட்டும் வெளிநாட்டில் பணி செய்து அதன் பிறகு இந்தியா வந்து செட்டிலாக வேண்டும் என்ற மனநிலை தான் அதிக நபர்களிடம் உள்ளது என்றும் அந்த சர்வே கூறுகின்றது.